சென்னை: ராணுவ மோதல் தீவிரம் அடைந்துள்ள சூடானில் 80 தமிழர்கள் உள்ளனர் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், உள்நாட்டு போர் நடைபெறும் சூடானில் இருந்து தமிழர், இந்தியர்களை மீட்பது நமது கடமை. நேற்றிரவு வரை 80 தமிழர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. சூடானில் தவிக்கும் தமிழர்களை மீட்பது குறித்து ஒன்றிய அரசோடு பேசி வருகிறோம். விரைவில் அவர்களை தமிழகம் அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
சூடான் நாட்டில் அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தலைநகர் கார்டோம் மற்றும் ஓம்டர்மேன் நகரங்களில் துப்பாக்கி சூடு, பீரங்கி தாக்குதல்கள் மற்றும் வான்வழித்தாக்குதல் நடத்தப்பட்டன. சூடானில் தற்போது நிலைமை மிகவும் பதற்றமாக காணப்படுவதால் அங்கு இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தியா கவனம் செலுத்தி வருகின்றது. இதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, சவுதி அரேபியா உள்ளிட்ட மற்ற நாடுகளுடன் இந்தியா நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றது.
சூடானில் இருந்து வெளியேற முடியாமல் இந்தியர்கள் தவித்து வருகின்றனர். வெளியுறவு துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், சூடானில் நிலைமை தொடர்ந்து பதற்றமாக இருக்கிறது. வன்முறையால் பாதிக்கப்பட்ட சூடானில் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. அங்குள்ள இந்தியர்களை வெளியேற்றுவதற்காக சில திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றது. அங்குள்ள சூழலை கருத்தில் கொண்டு அது செயல்படுத்தப்படும் என்றார்.