பூஞ்ச் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பஞ்சாப் முதலமைச்சர் அறிவித்துள்ளார்…
இந்திய ராணுவத்திற்கு சொந்தமான வாகனம் ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு ஜம்மு காஷ்மீரின் பிம்பர் காலி பகுதியிலிருந்து பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சன்ஜியாத் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று மாலை 3 மணியளவில் பனிமூட்டம் அதிகமாக இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் ராணுவ வாகனத்தின் மீது கையெறி குண்டுகளை வீசி திடீரென தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதில் ராணுவ வாகனம் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. சம்பவத்தில் ராஷ்டிரிய ரைபிள் படைப்பிரிவைச் சேர்ந்த 5 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் பூஞ்ச் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 4 ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி நிவாரணமும், அரசு வேலையும் வழங்கப்படும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.