டெல்லி: சர்வதேச அளவில் பல நாடுகளிலும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், எந்தெந்த நாடுகளில் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதேநேரம் கொரோனா முடிந்த பிறகு பணப்புழக்கம் அதிகமாக இருந்ததால், அது விலைவாசி உயர்வுக்குக் காரணமாக இருந்தது. இதனால் அமெரிக்கா தொடங்கி அனைத்து நாடுகளிலும் விலைவாசி கடுமையாக உயர்ந்தது.
மத்திய வங்கிகள்: இதனால் நிலைமையைச் சமாளிக்க அனைத்து நாட்டு மத்திய வங்கிகளும் இப்போது வட்டி விகிதத்தைத் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. அமெரிக்கா தொடர்ச்சியாக 0.75%, 0.5% என்று வட்டியை உயர்த்தியே வருகிறது. இப்படி வட்டி விகிதம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் அது பொருளாதாரத்தைக் கடுமையாகப் பாதிக்கிறது. இதனால், விலைவாசி கட்டுக்குள் வரும்தான் என்றாலும் கூட அத்துடன் பல நாடுகளிலும் பொருளாதார மந்தநிலையும் கூட ஏற்படும் அபாயம் இருக்கவே செய்கிறது.
பொருளாதார மந்தநிலை என்பது பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்படும் வீழ்ச்சி அல்லது சுருக்கம் ஆகும். நாம் செய்யும் செலவுகள் குறையும் போது, பொருளாதாரம் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியை அடைகிறது. பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்படும் இந்த மந்தநிலை சில காலாண்டுகளுக்கு நீடிக்கும், இதனால் பொருளாதாரத்தின் வளர்ச்சி முற்றிலும் தடைப்படும். அத்தகைய சூழ்நிலையில், ஜிடிபி, கார்ப்பரேட் லாபம், வேலைவாய்ப்புகள் போன்ற அனைத்து பொருளாதார காரணிகள் வீழ்ச்சியடைகின்றன.
மந்த நிலை: இதனால் மக்கள் மிகக் கடுமையாகவே பாதிக்கப்படுவார்கள். இதனால் எந்தவொரு மத்திய வங்கியும் பொருளாதார மந்தநிலை ஏற்படுவதைத் தடுக்கவே தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே எந்தெந்த நாடுகள் பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ளும் ஆபத்து இருக்கிறது என்பது குறித்த ஒரு டேட்டா சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் ஒரு சில ஆசிய நாடுகள் மந்தநிலையில் நுழைய அதிக ஆபத்தில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தைத் தொடர்ந்து அதிகரித்து வந்தால், உலகளாவிய மந்தநிலை 2023இல் தொடங்கும் ஆபத்து உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. பணவீக்கத்தை எதிர்த்துப் போராட வட்டி விகிதம் உயர்த்தப்படுவதே மந்தநிலையில் நாம் நுழையக் காரணமாக அமையலாம். ஏற்கனவே, அமெரிக்காவில் சில வங்கிகள் பொருளாதார திவால் ஆகும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளன.
உலக நாடுகள்: இது குறித்து அமெரிக்காவின் பிரபல ப்ளூம்பெர்க் என்ற இதழ் மந்தநிலை மீட்டர் ஒன்றை உருவாக்கியுள்ளது. உலகளவில் பார்க்கும் போது, வளர்ந்த நாடுகளில் அதிகபட்சமாகப் பிரிட்டன் போன்ற மேற்கத்திய நாடுகளில் 75 சதவீதம் பொருளாதார மந்தநிலையைச் சந்திக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல நியூசிலாந்து 70 சதவீதமும் அமெரிக்கா 65 சதவீதமும் உள்ளது. மேலும், கனடா 60 சதவீதம், ஆஸ்திரேலியா 40 சதவீதம் மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அதேபோல வளரும் நாடுகள் என்று பார்க்கும் போது, தென்னாப்பிரிக்கா 45 சதவீதம், பிரேசில் 15 சதவீதம் மற்றும் மெக்சிகோ 27 சதவீதம் மந்தநிலையால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது. இந்தோனேசியாவில் 2 சதவிகிதம், சீனாவில் 12 சதவிகிதம், பிரேசிலில் 15 சதவிகிதம், சுவிட்சர்லாந்து 25 சதவீத பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்தியா: முற்றிலும் கச்சா எண்ணெய்யை மையமாகக் கொண்ட சவுதி அரேபியாவில் கூட 5% பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ளதாம். ஆனால், இதில் இந்தியாவில் மட்டும் பொருளாதார மந்தநிலை ஏற்பட வாய்ப்பே இல்லை என்று அதில் கூறப்பட்டுள்ளது. நமது நாட்டில் பொருளாதார மந்தநிலை ஏற்பட ஜீரோ சதவிகிதம் மட்டுமே வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் பொருளாதாரம் நல்ல நிலையிலேயே உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.9%ஆகவே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2024 ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.3%ஆக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.