சென்னை: சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில் சிறைவாசிகளுக்கான விளையாட்டு பயிற்சிகள் தொடக்க விழா மற்றும் காவலர்களுக்கான மின் மிதி வண்டிகள் வழங்கும் விழா நேற்று மத்திய சிறை-1 புழலில் நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளையாட்டுக்கள் வழி சீர்திருத்தம் செய்யும் நோக்கில் சிறை வாசிகளுக்கு உள் மற்றும் இவளி விளையாட்டு உபகரணங்களை வழங்கி கைப்பந்து, இறகுப்பந்து ஆகிய போட்டிகளை தொடங்கி வைத்தார். மேலும் சிறையில் பாதுகாப்பு சுற்று வருவதற்கு சிறைக்காவலர்களுக்கு மின் மிதி வண்டிகளை வழங்கினார்.
சட்டம், நீதி மற்றும் சிறைகள் (ம) சீர்திருத்தப் பணிகள் துறை அமைச்சர் ரகுபதி சிறையில் வாசிப்புத்திறனை மேம்படுத்தும் நோக்கில் விரிவாக்கப்பட்ட சிறை நூலகத்தை திறந்து வைத்தார். பால்வளத்துறை அமைச்சர் நாசர் சிறைவாசிகள் மனஅழுத்தத்திலிருந்து விடுபட இசைக்கருவிகளை வழங்கினார். மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் வாழ்த்துரை வழங்கினார்.
இவ்விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-
சிறைக்குள்ளே ஏதோ சில காரணங்களால் வந்துள்ளீர்கள். உங்களுக்காக உங்கள் குடும்பத்தினரும் உறவினர்களும் வெளியில் காத்துக் கொண்டு இருகிறார்கள் என்பதை மனதில் நிறுத்தி நீங்கள் ஒழுக்கத்துடன் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, சிறை வளாகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரக்கன்றுகளை நடவு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, காவல் துறை இயக்குநர் தலைமை இயக்குநர் அமரேஷ் புஜாரி, முன்னிலையுரையாற்றினார். சிறைத்துறை துணைத்தலைவர் (தலைமையிடம்) கனகராஜ், சென்னை சரக சிறைத்துறை துணைத்தலைவர் முருகேசன், புழல், மத்திய சிறை-1 (தண்டனை), சிறை கண்காணிப்பாளர் நிகிலாநாகேந்திரன் மற்றும் புழல், மத்தியசிறை-2 (விசாரணை), சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்..