புதுச்சேரி அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் மாதத்தில் மூன்று வெள்ளிக்கிழமை மட்டும் ரெண்டு மணி நேரம் அலுவலகத்திற்கு லேட்டாக வரலாம் என புதுச்சேரி துணை நிலைய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: ‘புதுச்சேரி அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களின் நலனைக்கருத்தில் கொண்டு அவர்கள் வழக்கமான வெள்ளிக்கிழமைப் பூஜைகள் மேற்கொள்வதற்கு ஏதுவாக ஒரு மாதத்தில் மூன்று வெள்ளிக்கிழமைகள் மட்டும் காலை 8. 45 முதல் காலை 10. 45 வரை 2 மணி நேரம் சிறப்பு அனுமதி அளிக்கப்படும். இதற்கான பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையின் கோப்புக்கு துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் அனுமதி அளித்துள்ளார்.
அதன்படி, சிறப்பு அனுமதி மாதத்தில் மூன்று வெள்ளிக்கிழமைகளுக்கு மட்டுமே வழங்கப்படும். இதனால் அரசு பணிகள் பாதிக்கப்படக்கூடாது. பெண்கள் மட்டுமே பணிபுரியும் இடங்களில் சுழற்சி முறையில் அனுமதி வழங்கலாம். மருத்துவமனைகள், காவல் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற நேரடி பொதுமக்கள் சேவை அத்தியாவசியப் பணிகளில் உள்ள பெண்களுக்கு இந்த சிறப்பு அனுமதி பொருந்தாது’ இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.