சென்னையின் புறநகர் பகுதியான ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வளர்புறம் பகுதியைச் சேர்ந்தவர் பிபிஜி சங்கர் (42).
அப்பகுதியில் பிரபல ரவுடியான இவர் மீது 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
பாஜகவில் இணைந்த பிபிஜி சங்கர் வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவராகவும், பாஜகவில் எஸ்சி எஸ்டி மாநில பொருளாளராகவும் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில், நேற்று சென்னை கொளத்தூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பின்னர் தனது காரில் நசரத்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது கார் மற்றும் பைக்கில் வந்த சுமார் பத்து பேர் கொண்ட கும்பல், பிபிஜி சங்கர் காரின் மீது நாட்டு வெடி குண்டை வீசியுள்ளது. இதையடுத்து காரில் இருந்து தப்ப முயன்ற அவர், சாலையின் எதிர் திசையில் ஓடியுள்ளார். அப்போதும் அவரை விடாமல் துரத்திய அந்த கும்பல், அவர் மீது மீண்டும் நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளது.
அதேநேரத்தில் அந்த சாலையில் பதுங்கியிருந்த சிலர், பயங்கர ஆயுதங்களால் சுற்றிவளைத்து பிபிஜி சங்கரை சரமாரியாக வெட்டிதள்ளினர். இதில் பயங்கர வெட்டுகாயம் அடைந்த பிபிஜி சங்கர், அதிக ரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அந்த கொலை கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.
பிரபல ரவுடி படுகொலையால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகளை பிடிக்க இதுவரை 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன.
முதல்கட்டமாக கொலை நடைபெற்ற இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து கொலையாளிகள் யார் என்ற விவரத்தை சேகரித்து வருகின்றனர். அதன்பின்னரே கொலைக்கான காரணமும் தெரியவரும். பிபிஜி சங்கர் பிரபல ரவுடி என்பதால் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.