6000 கிலோ அரிசி.. 6000 கிலோ காய்கறிகள்.. விடிய விடிய சாப்பாடு… மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 1 லட்சம் பேருக்கு கல்யாண விருந்து.. 23 வருடங்களாக தொடரும் சேவை..!

கல்யாணத்துக்கு போயிட்டு சாப்பிடாம வந்தா எப்படி? என்று உறவினர்கள், நண்பர்கள் திருமணத்திற்கு சென்று விட்டு சாப்பிடாமல் செல்பவர்களைப் பார்த்து கேள்வி கேட்கிறோம்..

சாதாரண கல்யாணத்துலேயே அப்படி என்றால், மதுரை மீனாட்சியின் திருமணத்திற்குச் சென்று விட்டு, சாப்பிடாமல் போனால் எப்படி? கடந்த 23 வருடங்களாக திருக்கல்யாணத்தைப் பார்க்க வரும் பக்தர்களுக்கு உணவு சமைத்து பரிமாறுகிறார்கள் பழமுதிர்ச்சோலை திருவருள் முருகன் பக்தர் சபையினர்.

திருக்கல்யாணத்திற்கு முதல் நாள் மாலை உணவில் துவங்கி, திருக்கல்யாணத்தன்று காலையும், மதியமும் பக்தர்களுக்கு அறுசுவை விருந்து. 6,000 கிலோ அரிசி, 6,000 கிலோ காய்கறிகள் என தடபுடலாக நேற்று காலையில் இருந்தே காய்கறிகளை நறுக்கும் பணி என ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் களத்தில் இறங்கினார்கள்.

மதுரைன்னாலே சித்திரைத் திருவிழா இல்லமாலா? உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா நடப்பாண்டில் ஏப்ரல் 23ம் தேதி முதல் துவங்கி களைகட்டி வருகிறது. மீனாட்சியின் கல்யாணத்தையும், அழகர் ஆற்றில் இறங்குவதையும் நேரில் கண்டு தரிசிக்க தமிழகத்தின் பிற நகரங்களில் இருந்து மட்டுமல்ல இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்துள்ளனர். இன்று விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் இந்த அறுசுவை விருந்து நடைபெறுவது வழக்கம். இன்று மே 2ம் தேதி திங்கட்கிழமை உலகம் முழுவதிலும் இருந்து திருக்கல்யாணத்தை காண வரும் பக்தர்களுக்காக அறுசுவை விருந்து தயாராகி வருகிறது. நேற்று மாலை துவங்கி, இன்று காலை, மதியம் என 3 வேளை கல்யாண விருந்து வழங்கப்படுகின்றது. இதற்காக மக்களிடம் இருந்து இருந்து பெறப்பட்ட அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்களை கொண்டு 500 க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள் மூலம் விருந்து தயாரிக்கப்படுகிறது. இவர்களுடன் 2,000க்கும் அதிகமான தன்னார்வலர்கள் காய்கறிகளை நறுக்கி கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், வெஜ் பிரியாணி, சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், கூட்டு, பொரியல், கேசரி, வடை என உணவு வழங்கப்படுகிறது. இதற்காக 6 டன் அரிசி, 6 டன் காய்கறி மற்றும் மளிகை பொருட்களை கொண்டு உணவு தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த திருக்கல்யாண விருந்தை தயாரிக்க வருகை தரும் சமையல் கலைஞர்கள், உதவியாளர்கள் என யாருக்குமே ஊதியம் எதுவுமே கிடையாது. இவர்கள் எல்லாம் காலங்காலமாக கோவிலுக்காகவும், மக்களுக்காகவும் இந்த சேவையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். சமையல் பணியாளர்கள் மட்டுமல்ல காய்கறிகளை வெட்டி கொடுக்கும் பணிக்கு வரும் பெண்களும் இதே போல் ஆண்டாண்டு காலமாக இச்சேவையில் ஈடுபட்டு வருவதாக நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு லட்சம் பேருக்கு உணவை தயாரிக்கும் பணியிலே மிக தீவிரமாக ஈடுபடுகிறார்கள். இந்த அறுசுவை உணவு வழங்கப்படுவதனால் சித்திரை திருவிழாவுக்கு வரக்கூடிய பக்தர்கள் பசியின்றி உணவை உண்டு மனநிறைவுடன் ஊருக்கு திரும்ப செல்லலாம். இந்த திருக்கல்யாண விருந்துக்கு மதுரையில் இருக்கக்கூடிய ஆயிரக்கணக்கான மக்கள்களும் பக்தர்களும் உதவி செய்து வருகிறார்கள். மீனாட்சி அம்மனை வழிபட்டு பசியோடு மக்கள் வீடுகளுக்கு திரும்பக் கூடாது என்பதற்காக இந்த முறை கடைபிடிக்கப்பட்டு வருவதாக கோவில் நிர்வாகம், விழா ஏற்பாட்டாளர்கள் உணர்ச்சிபூர்வமாக தெரிவித்துள்ளார்கள்.