சென்னை: கஞ்சா வியாபாரிகள் மீதான நடவடிக்கையைத் தீவிரப்படுத்த வேண்டும் என போலீஸ் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
கஞ்சா விற்பனை தொடர்பாக 20 ஆயிரத்து 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 25 ஆயிரத்து 721 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 5 ஆயிரத்து 723 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. எனினும் கஞ்சாவிற்பனை முற்றிலும் ஒழியவில்லை.இந்நிலையில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 4.0 நடவடிக்கையை போலீஸார் கையில் எடுத்துள்ளனர்.
தாம்பரம் காவல் ஆணையர் எல்லைக்கு உட்பட்ட குன்றத்தூரில் நேற்று முன்தினம் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதில் ரூ.1 கோடி மதிப்பிலான22 டன் குட்கா புகையிலை பொருட்கள் சிக்கின. இதைக் கடத்தி வந்த 3மினி லாரி, 4 மினி ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தலில் ஈடுபட்டவர்கள் போலீஸாரை கண்டதும் தப்பி ஓடிவிட்டனர். அவர்களைக் கைது செய்யத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீதான நடவடிக்கையைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட எஸ்பிக்கள், காவல் ஆணையர்களுக்கு டிஜிபி. சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார்.
கஞ்சா விற்பனை தொடர்பான தகவல் கிடைத்தால் 044 28447701 என்ற தொலைபேசி எண் மூலமாகவும், tndgpcontrolroom@gmail.com என்ற இ-மெயில் மூலமாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்றும், தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்பட்டு அவர்களுக்குத் தக்க வெகுமதி வழங்கப்படும் என்றும் டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.