கோவை மாவட்டம் சோமனூரை சேர்ந்தவர்கள் ராமசாமி, சூர்யா மணி என்ற சவுந்தர்ராஜன். இவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக சோமனூர் செந்தில் நகரில் ஜவுளி தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார்கள். இங்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜதுரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் அந்த ஜவுளி நிறுவனத்தில் ஊஞ்சபாளையத்தைச் சேர்ந்த ராஜசேகர் ( வயது 42) என்பவர் கடந்த 25 ஆண்டுகளாக கணக்காளராக வேலை பார்த்து வந்துள்ளார். அவர் பணியாற்றிய காலத்தில் ஜவுளி நிறுவனத்தில் ரூ2கோடி அளவில் மோசடி செய்ததாக தெரிகிறது .இது குறித்து விசாரிக்க கருமத்தம்பட்டி போலீசார் அவரை பலமுறை அழைத்துள்ளனர். ஆனாலும் அவர் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருந்தார் .இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் ஜவுளி நிறுவனத்தின் வரவு செலவு கணக்கு நோட்டை கணக்காளராக இருந்த ராஜசேகர் பராமரித்து வந்துள்ளார். அதை பயன்படுத்தி அவர் சுமார் ரூ2 கோடி மோசடி செய்துள்ளார் . இதை நிறுவனத்தின் உரிமையாளர்கள் கண்டுபிடித்துவிட்டதால் வரவு செலவு கணக்கு நோட்டை அழிக்க திட்டமிட்டார். அதன்படி 3 நாட்கள் விடுமுறையில் செல்வதாக கூறி விட்டு சென்ற ராஜசேகர் யாருக்கும் தெரியாமல் ஜவுளி நிறுவனத்திற்கு தீ வைத்துள்ளார். இதில் வரவு செலவு கணக்கு நோட்டுகளை வைத்திருந்த அலுவலக அறையும் தீயில் எரிந்து நாசமானது. எனவே போலீசார் தீ விபத்து வழக்கை தீவைப்பு வழக்காக மாற்றி கணக்காளர் ராஜசேகரை நேற்று கைது செய்தனர்.. இவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..