ரயில்கள் மீது அடுத்தடுத்து கல்வீச்சு… 5 ஆண்டு சிறை – ரயில்வே அதிகாரிகள் எச்சரிக்கை.!!

சென்னை : அடுத்தடுத்து கல்வீச்சு சம்பவங்கள் தொடரும் நிலையில், ரயில்கள் மீது கல் வீசினால், ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என, ரயில்வே அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.தென்மாநிலங்களில் முதல் முறையாக, சென்னை சென்ட்ரல் – கர்நாடகா மாநிலம், மைசூர் இடையே, வந்தே பாரத் ரயில் சேவை துவங்கப்பட்டது.

சென்னை – கோவைக்கு மற்றொரு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு பயணியர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இருப்பினும், சிலர் வந்தே பாரத் ரயில்கள் மீது, கல் வீசி பயணியர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.மைசூரில் இருந்து இம்மாதம், 6ம் தேதி, சென்னை நோக்கி வந்த வந்தே பாரத் ரயில் மீது, அரக்கோணம் அருகே மர்ம நபர்கள் கற்களை வீசி உள்ளனர். சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற வந்தே பாரத் ரயில் மீது, நேற்று, கொரட்டூர் – வில்லிவாக்கம் இடையே, சிலர் கற்களை வீசி உள்ளனர்.

இதனால், ரயிலில் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இது, ரயில் பயணியர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில்வே பொதுச் சொத்துக்களை பாதுகாப்பது அனைவருடைய கடமை. ரயில்கள் மீது கற்களை வீசுவது, ரயில்வே சட்டத்தில், 153, 154வது பிரிவுகளின் கீழ் கிரிமினல் குற்றம். சட்டவிரோத செயலை செய்தல், ஆபத்தை ஏற்படுத்துதல் மற்றும் பயணியரின் பாதுகாப்பில் ஆபத்தை ஏற்படுத்தினால், ஓராண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை, சிறைத் தண்டனை விதிக்கப்படும். கற்கள் வீசியவர்களை, ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீசார் தேடி வருகின்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.