சேலம்: வேட்புமனுவில் பொய்யான தகவலை தெரிவித்த புகாரின்பேரில் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்த சேலம் போலீசார் ஆவணங்களை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டியை சேர்ந்தவர் மிலானி. இவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது சேலம் 1வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், ‘எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் தகவல்களை மறைத்து எடப்பாடி பழனிசாமி பொய்யான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். அவரது அசையும், மற்றும் அசையா சொத்துக்கள், தொழில், வருமான ஆதாரங்கள் உண்மையான சொத்துக்களின் சந்தை மதிப்பு, கல்வி தகுதி விவரங்களில் தவறான தகவல்களை அளித்துள்ளார்’ என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார், எடப்பாடி பழனிசாமி மீது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125 ஏ (1) (2), (3) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் சூர்யா, இன்ஸ்பெக்டர் புஷ்பராணி ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்டமாக ஆவணங்களை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வங்கியின் வரவு- செலவு கணக்கு தொடர்பாக விவரங்கள் சேரிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் புகார்தாரரை அழைத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்..