தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி துவங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடந்தது.
நீலகிரியில் 41 மையங்களில் தேர்வு நடந்தது. மார்ச் 27ம் தேதி கடந்த கணித தேர்வின்போது ஊட்டி அருகே அரசு உதவிபெறும் பள்ளியான சாம்ராஜ் மேல்நிலைப்பள்ளியில் உள்ள மையத்தில் மாணவ, மாணவிகள் சிலருக்கு தேர்வு பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள், கேள்விகளுக்கு விடைகளை எழுத உதவியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அந்த மையத்தில் தேர்வெழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் தனியாக சீலிடப்பட்ட உறையில் அரசு தேர்வுகள் இயக்குநரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. விசாரணையில், தேர்வில் விடை எழுத மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உதவியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஆசிரியர்கள் 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியான நிலையில், சாம்ராஜ் பள்ளியில் தேர்வெழுதிய 34 மாணவ, மாணவிகளின் கணித பாடத்திற்கான தேர்வு முடிவுகள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நேரடி விசாரணைக்கு பின்னர் முடிவுகள் வெளியாகும் என கூறப்பட்டது. இவ்விவகாரத்தில் விசாரணை அதிகாரியாக கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் நேற்று சாம்ராஜ் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது சம்பந்தப்பட்ட 34 மாணவ, மாணவிகளும் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்த அறிக்கை சென்னையில் உள்ள அரசு தேர்வுகள் இயக்குநரகத்திற்கு அனுப்பப்படும். அதன் அடிப்படையில் முடிவுகள் அறிவிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.