காந்திநகர்: இன்று(மே 12) குஜராத் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி சுமார் ரூ.4,400 மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க இருக்கிறார்.
இது குஜராத்தின் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இன்று குஜராத்தில் அகில பாரதிய சிக்ஷா சங்க அதிவேஷன் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் காலை 10.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதன் பின்னர் மதியம் 12 மணியளவில் காந்திநகரில் ரூ.4,400 மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அதாவது பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு வீடுகளின் சாவிகளை வழங்குகிறார். மட்டுமல்லாது இந்த திட்டத்தின் கீழ் ரூ.1,950 கோடியில் கட்டப்பட்ட 19,000 வீடுகளின் கிரக பிரவேச நிகழ்விலும் அவர் பங்கேற்கிறார்.
இதனையடுத்து நகர்ப்புற வளர்ச்சித் துறை, குடிநீர் வழங்கல் துறை, சாலை மற்றும் போக்குவரத்துத் துறை மற்றும் சுரங்கம் மற்றும் கனிமவளத் துறைகளின் ரூ.2,450 மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். அதேபோல பனஸ்கந்தா மாவட்டத்தில் பல கிராம குடிநீர் விநியோகத் திட்டங்கள், அகமதாபாத்தில் ஒரு நதி மேம்பாலம், நரோடா ஜிஐடிசியில் வடிகால் சேகரிப்பு வலையமைப்பு, மெஹ்சானா மற்றும் அகமதாபாத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், தஹேகாமில் உள்ள ஆடிட்டோரியம் போன்றவற்றையும் பிரதமர் மோடி மக்கள் பயன்பாடடுக்கு அர்ப்பணிக்கிறார்..