பெங்களூரு: கர்நாடகாவில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளால் அதிருப்தி அடைந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி திடீர் பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு புதன்கிழமை நடைபெற்றது. இது தொடர்பான பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் காங்கிரஸூக்கு சாதகமாக வந்துள்ளன. பாஜகவும், மஜதவும் பெரும் பின்னடைவை சந்திக்கும் என முடிவுகள் வெளியாகியுள்ளன. ஒரு சில நிறுவனங்கள் தொங்கு சட்டப்பேரவை அமையும் என தெரிவித்துள்ளன. இதனால், பாஜக, மஜத ஆகிய கட்சித் தலைவர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் மஜத தலைவரும், முன்னாள் முதல்வருமான குமாரசாமி திடீர் பயணமாக சிங்கப்பூருக்குச் சென்றுள்ளார். கருத்துக் கணிப்புகள் மஜதவுக்கு எதிராக வந்ததால் அவர் மனவருத்தம் அடைந்துள்ளதாகவும், மன உளைச்சலில் இருந்து வெளிவருவதற்காகவும், ஓய்வு எடுப்பதற்காகவும் அவர் சிங்கப்பூர் சென்றுள்ளார் என்றும் மஜத வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே தொங்கு சட்டப்பேரவை அமைந்தால் ஆட்சி அமைக்க மஜதவின் துணை தேவைப்படும் என்பதால் காங்கிரஸ், பாஜக தலைவர்கள் அவருக்கு வலைவீசி உள்ளனர். மஜத தேசிய தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவகவுடாவை இரு கட்சிகளையும் சேர்ந்த தலைவர்கள் தொடர்பு கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 10 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் நாளை மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.