பெங்களூர்: காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட சித்தராமையா பெங்களூரில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
கர்நாடக சட்டடசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. 13-ந் தேதி தேர்தல் முடிவு வெளியானதில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், கர்நாடகாவின் புதிய முதல்வர் யார்? என்பதில் காங்கிரஸ் மேலிடத்திற்கு பெரும் தலைவலி ஏற்பட்டது.
முதல்வர் பதவியை பெறுவதில் முன்னாள் முதல்வர் சித்தராமையா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் இருவருமே காங்கிரஸ் தலைமையிடத்தில் முட்டி மோதினர். டிகே சிவக்குமார் தொடர்ந்து விடாப்பிடியாக இருந்ததால் இழுபறி நீடித்தது வந்தது. இறுதியில் சோனியா காந்தி தலையிட்ட பிறகு டிகே சிவக்குமார் இறங்கி வந்தார்.
முதல்வர் பதவி ஆளுக்கு 30 மாதங்கள் வீதத்தில் பங்கிட்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இது குறித்து காங்கிரஸ் மேலிடம் எதுவும் கூறவில்லை. முதல்-மந்திரி பதவி விஷயத்தில் சுமுக தீர்வு ஏற்பட்டதை அடுத்து சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் டெல்லியில் இருந்து மதியம் 3 மணிக்கு தனி விமானத்தில் பெங்களூரு வந்தனர்.
பெங்களூரு வந்த சித்தராமையாவிற்கும் டிகே சிவக்குமாருக்கும் காங்கிரஸ் கட்சியினர் உற்சாக அழைப்பு விடுத்தனர். பின்னர் சிறிது நேரத்தில் பெங்களூரு பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் , முதல்வர் பதவிக்கு சித்தராமையாவின் பெயரை டி.கே.சிவக்குமார் முன்மொழிந்தார். எம்.எல்.ஏ.க்கள் பரமேஸ்வர், எச்.கே.பட்டீல், ஆர்.வி.தேஷபாண்டே, எம்.பி.பட்டீல், லட்சுமி ஹெப்பால்கர், தன்வீர்சேட், கே.எச். முனியப்பா ஆகியோர் வழிமொழிந்தனர். அதைத்தொடர்ந்து சித்தராமையா சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
சுமார் அரை மணி நேரம் இந்தக் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோர் மூத்த தலைவர்களுடன் ராஜ்பவனுக்கு சென்றனர். அங்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரி சித்தராமையா கடிதம் வழங்கினார். இதை ஏற்று ஆட்சி அமைக்க வரும்படி ஆளுநர் சித்தராமையாவிற்கு அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து, சித்தராமையா முதல்வராக பதவி ஏற்கும் விழா சனிக்கிழமை மதியம் 12.30 மணிக்கு கன்டீரவா அரங்கத்தில் நடைபெற உள்ளது. இதில் சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவக்குமார் துணை முதல்வராகவும் பதவி ஏற்கிறார்கள். அவர்களுடன் 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது.