அதிமுக பொதுச்செயலாளராக கே.பழனிசாமி பொறுப்பேற்ற பின்பு அக்கட்சியின் முதல் மாநாடு மதுரையில் ஆகஸ்ட் 20-ம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட அதிமுக நிர்வாகிகள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், வி.வி.ராஜன் செல்லப்பா ஆகியோர் கே.பழனிசாமிக்கு இருக்கும் ஆதரவை இந்த மாநாட்டுக்கு திரளும் கூட்டத்தை வைத்து நிரூபிப்போம் என்று கூறி வருகிறார்கள். மாநாட்டுக்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள அவர்கள், கட்சி நிர்வாகிகளிடம் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக மதுரையில் முகாமிட்டுள்ள அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், விதியின் சதியால் நானும் ஓபிஎஸ்-சும் பிரிந்தோம், எடப்பாடி பழனிசாமியிடமிருந்து அதிமுகவை மீட்டெடுக்க அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரையில் அமமுக நிர்வாகிகளுடன் அவர் கட்சியின் எதிர்காலத் திட்டங்களை பற்றி ஆலோசித்தார். தற்போது டி.டி.வி.தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர். விரைவில் சசிகலாவுடன் இணைந்து செயல்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து அமமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஜானகி அணியில்தான் கட்சியின் முன்னணி நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் இருந்தனர். ஆனால், தொண்டர்கள் ஜெயலலிதா பக்கம் இருந்ததால் கட்சி அவர் பக்கம் வந்தது. அதுபோன்ற நிலைமைதான் தற்போது அதிமுகவில் திரும்பியுள்ளது. தொண்டர்கள் டிடிவி.தினகரன், சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் பக்கம் உள்ளனர். நிர்வாகிகள் மட்டும்தான் கே.பழனிசாமி பக்கம் உள்ளனர்.
டி.டி.வி.தினகரனை சந்தித்ததைபோன்று, சசிகலாவையும் ஓ.பன்னீர்செல்வம் விரைவில் சந்திக்க உள்ளார். அதன் பின்பு மூவரும் இணைந்து செயல்படுவது குறித்து அறிவிப்பு வெளியாகும்.
கே.பழனிசாமி மதுரையில் ஆகஸ்ட் 20-ம் தேதி மாநாடு நடத்தி முடித்த பின்பு, அதைவிட பெரிய அளவில் ஓபிஎஸ், தினகரன் சார்பில் மாநாடு நடத்தும் திட்டம் உள்ளது. அந்த மாநாட்டு மேடைக்கு சசிகலாவை அழைத்து வர இருவரும் திட்டமிட்டுள்ளனர்.
எனினும், மாநாட்டை எந்த தேதியில் நடத்துவது, யார் யாரெல்லாம் பங்கேற்பது போன்றவை குறித்தெல்லாம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மக்களவைத் தேர்தலுக்கு முன்பு செல்வாக்கை வெளிப்படுத்தும் வகையில் இந்த மாநாடு இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்..