சென்னை: தமிழ்நாடு அரசு பேருந்துகளில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு டிக்கெட் கட்டணம் இல்லை என அரசிதழில் வெளியிடப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாடு அரசு பேருந்து 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு பல ஆண்டுகளாக டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவது கிடையாது. அதேபோல் பள்ளி மாணவர்களுக்கும் பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் 60 வயதுக்கும் அதிகமான முதியோர்கள் இலவச பஸ் பாஸ் மூலம் அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து நகர அரசு பேருந்துகளில் பெண்களுக்கும் கட்டணமில்லா பயண வசதி வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் குழந்தைகளுக்கான கட்டணமில்லா அரசு பேருந்து பயணத்துக்கான வயது வரம்பை தமிழ்நாடு அரசு உயர்த்தி இருக்கிறது.
அதன்படி 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணமில்லா பேருந்து சேவையை வழங்கி வந்த அரசு தற்போது அதை 5 வயதாக அதிகரித்து உள்ளது. இதன் மூலம் இனி 5 வயது வரையிலான குழந்தைகளும் அரசு பேருந்துகளில் எந்த விதமான கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக பயணம். அரசின் இந்த அறிவிப்பு அரசிதழில் வெளியாகி இருப்பதால் சாமானிய மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்..