தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் மற்றும் அவரின் உறவினர்கள், நண்பர்கள், டாஸ்மார்க் ஒப்பந்ததாரர்கள், திமுக பிரமுகர்கள் உள்ளிட்டவர்களின் வீடு, அலுவலகங்கள், குவாரிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று மூன்றாவது தினமாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வருமான வரி சோதனைக்கு பல்வேறு இடங்களில் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து, வருமானவரித்துறை அதிகாரிகளை விரட்டி அடித்த சம்பவமும் அரங்கேறியது. இது சம்பந்தமாக 11 பேர் இதுவரை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வருமான வரி சோதனை முழுவதும் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை டார்கெட் செய்யும் வகையிலேயே நடந்து வருகிறது. அவரை தவிர அவரின் உறவினர், நண்பர், அரசியல் தொடர்புடைய பல்வேறு இடங்களின் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, செந்தில் பாலாஜியின் நண்பர் கொங்கு மெஸ் நடத்தும் மணி, செந்தில் பாலாஜியின் அலுவலகத்தில் பணிபுரிந்த பிரேம்குமார், கரூர் மாநகராட்சி துணை மேயர் சரவணன், கோவையில் சில திமுக பிரமுகர்கள், சோடா நிறுவன உரிமையாளர் மணிகண்டன், ராயனூர் செல்லமுத்து, வையாபுரி நகரில் அமைந்துள்ள நிதி நிறுவனம், கரூர்-கோவை சாலையில் உள்ள சக்தி மெஸ், பவித்திரம் ரெடிமிக்ஸ் நிறுவனம் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
இந்நிலையில், மூன்று நாளாக நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், கணக்கில் வராத ரூ.3.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 2.1 கோடி ரூபாய் டாஸ்மாக் மதுபான லாரி ஒப்பந்ததார் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.