சென்னை: 16 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 31 ஆம் தேதி 16-வது ஐபிஎல் போட்டித் தொடர் நடைபெற்றது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்றுக்கள் முடிந்து பிளே ஆப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தகுதி பெற்றன. இதில் இறுதிப்போட்டிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் – குஜராத் டைட்டன்ஸ் அணியும் தகுதி பெற்றது.
இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், மழை காரணமாக திங்கள் கிழமை இந்த போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன்கள் சேர்த்தது.
ஆனால் சென்னை பேட்டிங்கை துவக்கியதும் மழை குறுக்கிட்டதால் 15 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டு 171 ரன்கள் வெற்றி இலக்கா நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கான்வே, ஷிவம் துபே ஓரளவு சிறப்பான பங்களிப்பை அளித்தனர். மிகவும் பரபரப்பாக கடைசி ஓவர் வரை சென்ற இந்த போட்டியில் சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை அணியின் ஆல்ரவுண்டர் கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிறப்பாக ஆடி சென்னை அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் 5-வது முறையாக சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஐபிஎல் தொடரில் கோப்பை வென்ற சென்னை அணிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- தோனியின் தலைமையின் கீழ் ஐந்தாவது முறையாக ஐபிஎல் டிராபியை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இக்கட்டான தருணத்திலும் அபாரமாக விளையாடிய ஜடேஜா வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெறுவதை உறுதி செய்தார்” என்று பதிவிட்டுள்ளார்.