கோவை : தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை தலைவர் காமினி பொறுப்பேற்ற பிறகு தமிழகம் முழுவதிலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 25.-ந்தேதி கோவை, செல்வபுரம் -பைபாஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் ஒரு லாரியில் 3000 கிலோ ரேஷன் அரிசியை ஏற்றி கள்ளத்தனமாக கேரளாவிற்கு கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக தெற்கு உக்கடம், அண்ணா நகரை சேர்ந்த அபிப் ரகுமான் என்பவரை போலீசார் பிடிக்கும் போது தப்பி ஓடிவிட்டார். இவரை கடந்த 12ஆம் தேதி பேரூர் அருகே போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர். இவர் இதே போன்று அரிசி கடத்தும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி பரிந்துரையின்படி கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் பிரபல ரேஷன் அரிசி கடத்தல் பேர்வழியான அபிப் ரஹ்மானை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆணை பிறப்பித்தார். அதன்படி நேற்று கோவை மத்திய சிறையில் உள்ள அபி ரஹ்மானுக்கு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்க்கான உத்தரவு வழங்கப்பட்டது.