அதிநவீன வசதிகள்.. கருணாநிதி நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையம் – அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்..!

சென்னை : சென்னை அண்ணா சதுக்கத்தில் ரூ.1.20 கோடி செலவில் கட்டப்பட்ட, கருணாநிதி நினைவு நூற்றாண்டு பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

மத்திய சென்னை தொகுதி எம்.பி. தயாநிதி மாறனின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.1.20 கோடி செலவில் கருணாநிதி நினைவு நூற்றாண்டு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது

இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, தயாநிதி மாறன் எம்.பி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கருணாநிதி பணியாற்றிய தொகுதியில் இந்த நவீன பேருந்து நிலையத்தை அமைப்பது பெருமை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கருணாநிதி நினைவு நூற்றாண்டு பேருந்து நிலையத்தை திறந்து வைத்தபிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார் அமைச்சர் உதயநிதி.

அப்போது பேசிய அவர், “கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி இந்த ஆண்டு முழுவதும் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் கொண்டாடப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார்.

கருணாநிதி பணியாற்றிய சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் அண்ணா நினைவிடம், கருணாநிதி நினைவிடத்திற்கு வெளியே நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

1.20 கோடி செலவில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளதோடு, தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு சிறப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக குளிரூட்டப்பட்ட அறை, நவீன கழிப்பறை கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறப்பான பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி பயன்பெறுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.