இன்று நள்ளிரவுடன் மீன்பிடி தடை காலம் ஓவர்… 50,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தயார் ..!

மீன்பிடி தடை காலம் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வரும் நிலையில், நாகை மாவட்டத்தில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயுத்தமாகியுள்ளனர்.

மீன்களின் இனபெருக்க காலத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி முதல்ஜூன் 14 ம் தேதி நள்ளிரவு வரை கிழக்கு கடலோர மாநில மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைவதால், நாகை மாவட்டத்தில் உள்ள ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் தங்களது படகுகளையும், வலைகளையும்
சீரமைத்து கடலுக்குச் செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.

நாகை துறைமுகத்தில் இருந்து அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார்நகர், நாகூர் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களின் சுமார் 500 விசைப்படகுகள் மற்றும், 5 ஆயிரம் பைபர் படகுகளும் கடலுக்கு செல்வதால், அதற்கு தேவையான டீசல், ஐஸ் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களையும், தளவாட பொருட்களையும் படகுகளில் ஏற்றி வருகின்றனர்.

இந்நிலையில் வருமானம் இன்றி வீட்டில் முடங்கி கிடந்த தங்களுக்கு தடைகாலம் முடிந்து கடலுக்கு செல்வதால், கூடுதலாக மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக நாகை மீனவர்கள் கூறுகின்றனர். டீசல் உள்ளிட்ட பொருட்களின் விலை உயர்வால் தங்களுக்கு போதிய லாபம் கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே மீனவர்கள் நீண்ட நாள் கோரிக்கையான மீனவர்களின் படக்கிற்கான டீசலை தமிழ்நாடு அரசு மானிய விலையில் வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.