கோவை: தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீஸ் ஐ.ஜி. காமினி உத்தரவின் பேரில் கோவையில் ரேஷன் அரிசி கடத்தியவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி பொள்ளாச்சி அருகே ஆனைமலை ,திவான்சா புதூர்,கோட்டூர் கொசவம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளிக்கூடம் அருகே போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு குடோனில் கேரளாவுக்கு கடத்துவதற்காக 1 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஆனைமலை திவான்ஷா புதூரை சேர்ந்த ராஜபாண்டி என்பவரை குடிமை பொருள் வழங்கல் துறை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கனவே குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டதை தொடர்ந்து 2 -வது முறையாக அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க குடிமைபொருள் வழங்கல் போலீசார் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இந்த பரிந்துரையை ஏற்று கலெக்டர் கிராந்தி குமார் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை போலீசார் சிறையில் உள்ள ராஜபாண்டியனிடம் நேற்று வழங்கினார்கள்.