விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலுக்குள் பட்டியலினத்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலுக்குள் சென்று வழிபட அனைவருக்கும் அனுமதி உண்டு என்பதால் இந்த விவகாரம் இரு சமூக பிரச்சனையாக மாறியது.
இரு சமூகத்தினரிடமும் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு கிடைக்காததால் கடந்த ஜூன் 7 ஆம் தேதி கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டது.தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் இரு சமூகத்தினரிடம் விசாரணையும் நடத்தினார்.இதனிடையே மேல்பாதி திரௌபதி அம்மன் கோவிலுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என்று விழுப்புரம் மாவட்டம் கரிபாளையத்தைச் சேர்ந்த சுதா சர்வேஷ் குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று (ஜூன் 21) சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நீதிபதி ஆதி கேசவன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.ஆகம விதிப்படி கோவில் பூஜை மற்றும் அபிஷேகங்கள் செய்யாமல் இருக்கக்கூடாது.பொதுமக்கள் இல்லாமல் பூஜை செய்வதற்கு அனுமதித்திருக்க வேண்டும். கோவிலுக்கு சீல் வைத்தது ஆகம விதிப்படி தவறானது என வாதிடப்பட்டது.
தமிழ்நாடு அரசு தரப்பில், இந்த கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். அறநிலையத்துறை இந்த கோவிலுக்கு சர்க்காரை நியமித்தும் கூட அவரால் பொறுப்பேற்க முடியவில்லை.இதனால் தான் கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த பிரச்சனை தொடர்பாக அறநிலையத்துறையை தான் அணுக வேண்டும் என்று மனுதாரருக்கு அறிவுறுத்தினர். மனுதாரரின் கோரிக்கையை அறநிலையத்துறை பரிசீலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.மேலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இருப்பதால் கோவிலுக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றுவதற்கு உத்தரவிட முடியாது என தெரிவித்த நீதிபதிகள் இந்த வழக்கை முடித்து வைத்தனர்.