வாஷிங்டன்: அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிக்கு நேற்று அரசு சார்பில் இரவு உணவு விருந்தை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அளித்தார்.
இந்த உணவு விருந்தில் இந்திய தொழில் அதிபர்களும் முன்னணி நிறுவனங்களின் சி.இ.ஓ.க்களும் கலந்து கொண்டனர். கலந்து கொண்டவர்களின் விவரங்களை பார்க்கலாம்.
பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பின் பேரில் அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு இரவு அமெரிக்க அரசு சார்பில் உணவு விருந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோருடன் பெரும் தொழில் அதிபர்கள், உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். இதில் 7,000-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினரும் பங்கேற்றனர். தொழில் அதிபர் முகேஷ் அம்பானி, ஆனந்த் மகிந்திரா, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் சிஇஒ சத்ய நாதெள்ளா, இந்திரா நூயி, ஆப்பிள் சிஇஒ டிம் குக் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
அரசு பிரதிநிதிகள் என்று பார்த்தால் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் வினய் மோகன் கவத்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அமெரிக்க வெளியுறவு துறை செயலர் ஆண்டனி பிளின்கன், அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி ஆகியோரும் இந்த உணவு விருந்தில் கலந்து கொண்டனர்.
அது போக இந்திய வம்சாவளியை சேந்த அமெரிக்க பிரதிநிதிகள் ரோ கன்னா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, நிகில் கம்நாத், பிரபல பேஷன் டிசைனர் ரால்ப் லவுரன் ஆகியோரும் இந்த உணவு விருந்தில் கலந்து கொண்டதாக தகவல்கள் கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், கெஸ்ட் செஃப் நினா கர்டிஸ் மற்றும் வெள்ளை மாளிகையில் உள்ள பிற செஃப்களுடன் இணைந்து டின்னருக்கான மெனுவை தயார் செய்தனர். இந்த மெனுவில் லெமன் டில் யோகர்ட் சாஸ், மில்லெட் கேக்குகள், காளான் உணவுகள் என விதவிதமான சுவைமிக்க சைவ உணவுகள் விருந்தில் இடம் பெற்றன..