வந்தாச்சு ‘பிளாக் செயின்’… தமிழ்நாட்டில் பத்திரப்பதிவில் அதிரடி மாற்றம்..!

சென்னை: தகவல் தொழில்நுட்பத் துறை சாா்பில் நம்பிக்கை இணையம் (பிளாக் செயின்) என்ற நவீன தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட சொத்து, திருமணப் பதிவு உள்ளிட்ட அனைத்து வகையான ஆவணங்களை திருத்த இயலாத நிரந்தர ஆவணங்களாக மாற்ற பதிவுத் துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

பத்திரப்பதிவு துறையால் அளிக்கப்பட்ட ஆவணங்களை யாரும் திருத்தி மோசடியில் ஈடுபட முடியாத அளவிற்கு மாற்றம் செய்ய பத்திரப்பதிவு துறை முடிவு செய்துள்ளது. பத்திரப்பதிவு ஆவணங்கள் திருத்தப்படுவதால் மோசடிகள் பல நடந்தது அதனால் பாதிக்கப்படுவோர் நீதிமன்றத்தை நாடும் நிலை ஏற்படுகிறது. பல வழக்குகள் நீதிமன்றத்தில் இதுபோன்ற மோசடிகள் காரணமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் பதிவு செய்யப்பட்ட சொத்து உள்ளிட்ட ஆவணங்களை திருத்த இயலாத நிரந்தர ஆவணங்களாக மாற்றும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டுமென அனைத்து சார் பதிவாளர்களுக்கும் பதிவுத் துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்த கடிதத்தை, அனைத்து சார் பதிவாளர்கள், மாவட்டப் பதிவாளர்கள், துணைப் பதிவுத் துறை தலைவர்கள் ஆகியோருக்கு பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அனுப்பியுள்ளார்.

“தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் நம்பிக்கை இணையம் (பிளாக் செயின்) என்ற நவீன தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட சொத்து, திருமணப் பதிவு உள்ளிட்ட அனைத்து வகையான ஆவணங்களை திருத்த இயலாத நிரந்தர ஆவணங்களாக மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பமானது, மின்னணு மயமாக்கப்பட்ட ஆவணங்களை உரிய காலத்துடன் முத்திரையிடுகிறது. இந்த முத்திரை காரணமாக, ஆவணங்களை முன் தேதியிட்டு மாற்றவோ அல்லது திருத்தவோ இயலாது. ஒளிவருடல் செய்யப்பட்ட ஆவணங்களை பிரித்து எடுத்து சேமித்து வைப்பதன் மூலமாக அவற்றின் மெய்த்தன்மை எந்தக் காலத்திலும் உறுதி செய்யப்படும்.

நம்பிக்கை இணையத் திட்டமானது, பதிவுத் துறையில் கடந்த 13-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. கடந்த மே 1-ஆம் தேதிக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் அனைத்திலும் நம்பிக்கை இணையம் (பிளாக் செயின்) ஏற்படுத்தப்பட்டுள்ளது. புதிதாக ஒரு ஆவணம் பதிவு செய்யப்பட்டு ஒளிவருடல் செய்யப்பட்டவுடன், அந்த ஆவணத்தில் நம்பிக்கை இணையம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மே 1-ஆம் தேதிக்கு முன்பாக ஒளிவருடல் செய்யப்பட்ட அனைத்து ஆவணங்களிலும் நம்பிக்கை இணையம் ஏற்படுத்தப்படும்.

நம்பிக்கை இணையம் குறித்த தகவல்களை அறிந்து கொள்ள அனைத்து சார் பதிவாளர்கள், மாவட்டப் பதிவாளர்கள், துணைப் பதிவுத் துறை தலைவர்களுக்கென அலுவலகத்தில் மட்டுமே செயல்படத்தக்க வகையிலான ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கை இணையம் ஏற்படுத்தப்பட்ட ஆவணங்களின் நகல்களை பொதுமக்கள் கோரினால் உரிய விண்ணப்பத்தின் அடிப்படையில் அவற்றை வழங்கலாம். அவ்வாறு வழங்கும் போது, நம்பிக்கை இணையத்தின் இலச்சினை சான்றிட்ட நகலின் இடதுபுறத்தில் அச்சிடப்பட்டிருக்கும். அவ்வாறு அச்சிடப்பட்டிருந்தால் அந்த ஆவணங்கள் நம்பிக்கை இணையம் வழி சரிபாா்க்கப்பட்டுள்ளதாகக் கருத வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கை இணையம் என்பது, குடிமக்களின் ஆவணங்கள், தரவுகளை பாதுகாப்பான முறையில் சேமிக்க அரசுத் துறைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு இணையவழி அமைப்பாகும். அத்துமீறி ஆவணங்களைத் திருடுவது, ஆவணங்களை கசிய விடுவது போன்றவற்றில் இருந்து பொதுமக்களின் ஆவணங்களைக் காக்க நம்பிக்கை இணையம் வழிவகுக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.