சாலை பணியாளர்கள் போராட்டம்..!

ஈரோடு மாவட்டம்:   சத்தியமங்கலத்தில் உள்ள நெடுஞ்சாலை துறை உப கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு சாலை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நெடுஞ்சாலை துறையில் பணிபுரியும் சாலை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு கோபிசெட்டிபாளையம் கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் ஆறு நாள் தொடர் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு ஆறு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு சம்பளப் பிடித்தம் செய்ததை கண்டித்து சத்தியமங்கலம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று 50க்கும் மேற்பட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த சாலை பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உட்கோட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். தாளவாடி உட்கோட்ட செயலாளர் மகேந்திரன் வரவேற்றார். சத்தியமங்கலம் உட்கோட்ட செயலாளர் முத்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.  பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தை வழங்க வேண்டும் சாலை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என சாலை பணியாளர்கள் கோஷமிட்டனர். இந்த போராட்டத்தில் கோட்ட செயலாளர் கருப்புசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் கதிரவன், சங்க நிர்வாகிகள் முருகவேல், ஜெபமாலை ராஜ், பெருமாள், செந்தில்நாதன், பாலசுப்பிரமணியன், சரவணகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.