புதுடெல்லி: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை முன்னிட்டு தலைவர்கள் பலரும் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்கள் அனைவருக்கும், குறிப்பாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பக்ரீத் என்பது அன்பு மற்றும் தியாகத்தின் புனித பண்டிகையாகும். துறவின் பாதையைப் பின்பற்றவும், தன்னலமின்றி மனித குலத்திற்குச் சேவை செய்யவும் இந்தத் திருவிழா நம்மைத் தூண்டுகிறது. இந்த தருணத்தில் சமுதாயத்தில் பரஸ்பர சகோதரத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் அதிகரிக்க நாம் அனைவரும் உறுதிமொழி எடுப்போம்” என தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “ஈதுல் அதா நல்வாழ்த்துக்கள். இந்த நாள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரட்டும். இது நமது சமூகத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வை நிலைநிறுத்தட்டும்” என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “ஈத்-அல்-அதா பண்டிகை தியாகம், நம்பிக்கை மற்றும் மன்னிப்பு ஆகியவற்றின் உன்னத விழுமியங்களை எடுத்துக்காட்டுகிறது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் சகோதரத்துவத்தின் பிணைப்பை வலுப்படுத்தவும், அமைதியான, இணக்கமான மற்றும் முற்போக்கான சமுதாயத்தை கட்டியெழுப்பவும் நாம் அனைவரும் உறுதியாக தீர்மானிப்போம்” என கூறியுள்ளார். காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “இந்த மங்களகரமான தருணம் அனைவருக்கும் அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியைத் தரட்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.