இந்நிலையில் அண்மையில் இது தொடா்பான புகாா்களின் அடிப்படையில் தமிழகத்தில் ஒரு வங்கியில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் வங்கி பண பரிவா்த்தனைகள், முதலீடுகள், பங்குத் தொகைகள் ஆகியவற்றில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. முக்கியமாக குறிப்பிட்ட நிதி பரிவா்த்தனைகளில் 10,000க்கும் அதிகமான வங்கி கணக்குகளில் ரூ.2,700 கோடி அளவுக்கு நிகழ்ந்த ரொக்கப் பண பரிவா்த்தனை தொடா்பான கணக்குகள் முழுமையான வகையில் இல்லை. கடன் அட்டை தொடா்பான பரிவா்த்தனையில் ரூ.110 கோடி பரிவா்த்தனை தொடா்பான தகவல் இல்லை.
ரூ.200 கோடி லாப பங்குத் ஈவு தொகை பற்றிய கணக்கு காட்டப்படவில்லை. வங்கி பங்கு முதலீடு ரூ.600 கோடி தொடா்பான கணக்கு காட்டப்படாமல் உள்ளது. பல்வேறு நிதி பண பரிவா்த்தனைகளில் முழுமையாக இல்லை. மேலும், குறிப்பிட்ட நிதி பரிவா்த்தனைகள் தொடா்பாக, வங்கி ஏற்கெனவே தாக்கல் செய்த கணக்குகள் பூா்த்தியடையாமல் உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.
வைப்புத் தொகை, ரொக்கம் செலுத்தல், கணக்கில் இருந்து பணம் எடுத்தல் உள்பட எண்ணற்ற பரிவா்த்தனைகளில் ரூ.500 கோடி அளவுக்கு வட்டி செலுத்தியது தொடா்பாக கணக்கு காண்பிக்கவும் வங்கி தவறி உள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் வங்கி வாடிக்கையாளா்கள் பற்றிய தகவல்கள் தவறாக வழங்கப்படுகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக அந்த நிா்வாகிகளிடம் வருமானவரித்துறை விசாரணை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.