வாணியம்பாடி: வலிப்பு நோய்க்கு தவறான ஊசி போட்டதால் 7ம் வகுப்பு மாணவர் பலியான விவகாரத்தில் போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி ஜடான்குட்டையை சேர்ந்தவர் சக்கரவர்த்தி(45) விவசாயி. இவரது மகன் சூரியபிரகாஷ் (13). 7ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சூரியபிரகாசுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. பெற்றோர் மற்றும் உறவினர்கள், அவரை மீட்டு அருகே நாயணசெருவு பகுதியில் உள்ள கிளினிக்குக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்த டாக்டர் கோபிநாத், சிறுவன் சூரியபிரகாசை பரிசோதித்து விட்டு, அவருக்கு ஊசி போட்டுள்ளார்.
வீட்டிற்கு திரும்பிய சிறிது நேரத்தில் மாணவனுக்கு காய்ச்சல் ஏற்பட்டு கடும் அவதிப்படவே நாட்றம்பள்ளி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சூரியபிரகாஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். போலீஸ் விசாரணையில், கிளினிக் நடத்திய திருப்பத்தூர் தில்லை நகரை சேர்ந்த கோபிநாத் (40) லேப் டெக்னீஷியன் முடித்துவிட்டு மருத்துவம் பார்த்து வருவதும், அவர் தவறான ஊசி போட்டதில் சிறுவன் இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்தனர்.