கோவை சரக டிஐஜி விஜயகுமார் மரணம் தமிழ்நாடு காவல் துறைக்கு பேரிழப்பு என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவை சரக டிஐஜி விஜயகுமார் தனது வீட்டில் துப்பாக்கியால் இன்று அதிகாலை சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் டிஐஜி விஜயகுமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தற்கொலை செய்து கொண்ட டிஐஜி விஜயகுமார் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், விஜயகுமார் மறைவுக்கு அமைச்சர் உதயநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,” கோவை சரக காவல்துறை துணைத்தலைவராக திறம்பட பணியாற்றி வந்த விஜயகுமார். அவர் அகால மரணம் அடைந்த செய்தியறிந்து துயருற்றேன். மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சென்னை மாநகர காவல்துறையின் துணை ஆணையர், கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் ஆகிய பணிகளில் துடிப்புடன் செயல்பட்ட விஜயகுமார் அவர்களின் மரணம் தமிழ்நாடு காவல்துறைக்கு பேரிழப்பு. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்” என்று பதிவிட்டுள்ளார்.