தேசிய சர்வதேச போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 90 பேருக்கு ரூ.5.97 கோடி ஊக்கத் தொகை- முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.!

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் சர்வதேச மாஸ்டர் பட்டம் வென்ற சென்னையைச் சேர்ந்த எஸ்.ரோஹித் கிருஷ்ணாவுக்கு ரூ.3 லட்சம், ஸ்பெயின் சாண்டாண்டரில் நடைபெற்ற பி.டபிள்யூ.எஃப்.

ஜுனியர் பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சென்னையைச் சேர்ந்த எஸ்.சங்கர் முத்துசாமிக்கு ரூ.4 லட்சமும், ஆந்திராவில் நடைபெற்ற 57-வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்ற 21 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.79 லட்சமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2021-22-ம் ஆண்டு நடைபெற்ற சப்-ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் தேசிய அளவிலான சாப்ட் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 56 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ.2 கோடியே 5 லட்சத்து 75 ஆயிரம், ஜப்பான், டோக்கியோவில் நடைபெற்ற பி.டபிள்யு.எஃப். பாரா பேட் மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்ற 3 விளையாட்டு வீரர் – வீராங்கனைகளுக்கு ரூ.2.55 கோடி, டெல்லியில் நடைபெற்ற கான்டினென்டல் மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்ற 3 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.15 லட்சம் உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டன.

மொத்தம் ரூ.5 கோடியே 96 லட்சத்து 75 ஆயிரத்துக்கான காசோலைகளை 90 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகையாக வழங்கும் அடையாளமாக 9 பேருக்கு காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, துறை செயலர் அதுல்ய மிஸ்ரா பங்கேற்றனர்.