டெல்லி: லோக்சபா தேர்தல் வியூகம் வகுக்க பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் டெல்லியிலும் பெங்களூரிலும் ஆலோசனை நடத்துகின்றன.
இந்த இரு அணிகளிலும் இணைத்து கொள்ளப்படா கட்சிகள் மதில் மேல் பூனைகளாக எந்த பக்கமும் தாவும் நிலையில் இருக்கின்றன.
லோக்சபா தேர்தலுக்கான களப் பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் முழு வீச்சில் முன்னெடுத்து வருகின்றன. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் மொத்தம் 38 கட்சிகள் பங்கேற்கும் என பாஜக அகில இந்திய தலைவர் ஜேபி நட்டா நேற்று அறிவித்தார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி: பாஜக, அதிமுக, சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசிய மக்கள் கட்சி, தேசிய ஜனநாயக மக்கள் கட்சி, சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா, ஜனநாயக் ஜனதா கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் (தேவநாதன் கட்சி),
அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் யூனியன், இந்திய குடியரசு கட்சி, மிசோ தேசிய முன்னணி, தமிழ் மாநில காங்கிரஸ், ஐபிஎப்டி (திரிபுரா), போடோ மக்கள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, மகாராஷ்டிரா கோமந்தக் கட்சி, அப்னா தள், அஸ்ஸாம் கன பரிஷத், ராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சி, நிஷாத் கட்சி, ஐக்கிய மக்கள் கட்சி லிபரல், அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் (புதுச்சேரி), சிரோமணி அகாலி தள் சயுன்க், ஜனசேனா, தேசியவாத காங்கிரஸ்(அஜித் பவார்), லோக் ஜன் சக்தி கட்சி , (ராம்விலாஸ்), இந்துஸ்தானி ஆவாம் மோர்ச்சா, ராஷ்டிரிய லோக் சமதா கட்சி,
விகாஷீல் இன்ஷான் கட்சி, சுஹெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி (ராஜ்பார்) உள்ளிட்ட 38 கட்சிகள் இன்றைய டெல்லி கூட்டத்தில் பங்கேற்க உள்ளன.
பெங்களூரு எதிர்க்கட்சிகள் கூட்டணி: காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம், உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய மாநாட்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, அகில இந்திய பார்வார்ட் பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உள்ளிட்ட 26 கட்சிகள் பங்கேற்றுள்ளன. இந்த கட்சிகளின் ஆலோனைக் கூட்டம் பெங்களூரில் நேற்று தொடங்கியது. இன்று 2-வது நாளாக பெங்களூரில் 26 கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனையை தொடருகின்றனர்.
இரு அணிகளிலும் இணையாதவை: பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணிகளில் 5 கட்சிகள் இணைத்துக் கொள்ளப்படாமல் இருப்பதும் தேசிய அளவில் விவாதமாகி இருக்கிறது. ஆந்திராவின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் ஆளும் பிஆர்எஸ், ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி மற்றும் ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் ஆகியவை இரு கூட்டணிகளிலும் இணைத்துக் கொள்ளப்படவில்லை. இருப்பினும் ஆளும் கட்சிகள் என்பதால் ஜெகன் மற்றும் நவீன் பட்நாயக் கட்சிகள் பாஜகவுடன் இணக்கமான போக்கை கடைபிடிக்கின்றன. தெலுங்கானா பி.ஆர்.எஸ். கட்சியை பாஜகவின் பி டீம் என காங்கிரஸ் முத்திரை குத்துகிறது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி, பாஜக கூட்டணியில் இணைய ஆந்திராவில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அந்த கட்சியையும் சேர்க்கவில்லை. ஓவைசியின் மஜ்லிஸ் கட்சியானது பாஜக, காங்கிரஸை சம அளவில் எதிர்ப்பதாக கூறி வருகிறது. இருப்பினும் இப்படியே 5 கட்சிகளும் தனித்தே இருந்துவிடுமா? அல்லது ஏதேனும் ஒரு கூட்டணியில் பகிரங்கமாக இணையுமா? என்பது விரைவில் தெரிந்து விடும்.