ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் புஞ்சை புளியம்பட்டியில் கோவை – சத்தியமங்கலம் சாலையில் சிசிடிவி கேமரா விற்பனை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கண்ணதாசன் என்ற தொழிலாளி வேலை செய்து வந்தார். கடந்த 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு கண்ணதாசன் சிசிடிவி கேமரா பொருத்தும் பணியை முடித்துவிட்டு கடைக்கு சென்று கடையின் கதவை திறந்து வைத்துவிட்டு கடையிலேயே படுத்து உறங்கினார்.
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் 24 ஆம் தேதி அதிகாலை திறந்து வைக்கப்பட்டிருந்த கடைக்குள் புகுந்த திருடன் உறங்கிக் கொண்டிருந்த கண்ணதாசனின் அருகில் வைக்கப்பட்டிருந்த செல்போன் மற்றும் கேமரா பொருத்த பயன்படுத்தப்படும் உபகரணங்கள் அடங்கிய இரண்டு பெட்டிகளை திருடிக் கொண்டு கடையை விட்டு வெளியே சென்று தாம் வந்திருந்த இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினான். கடையில் உறங்கிக் கொண்டிருந்த கண்ணதாசன் திருடன் வந்தது தெரியாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். திருடன் கடையில் புகுந்து திருடிய காட்சி கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இதுகுறித்து கடை உரிமையாளர் ஜெயக்குமார் புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..