ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தொப்பம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியில் வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய விளை நிலத்தில் மூன்று ஏக்கர் பரப்பளவில் ரப்பர் பேண்ட் தயாரிக்கும் தொழிற்சாலை கடந்த ஆறு மாதங்களாக இயங்கி வருகிறது.
இந்த தொழிற்சாலை எந்தவித அனுமதியும் இன்றி இயங்குவதாக கூறப்படுகிறது. தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் அருகே உள்ள செயல்படாத கல்குவாரியில் தேங்கியுள்ள நீரில் நேரடியாக கலக்கப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள அண்ணாநகர், ஜீவா நகர், கணபதி நகர், பாரதி நகர், குரும்பபாளையம், அன்னே கவுண்டம்பாளையம், பாச்சாமல்லனூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதியில் அமைந்துள்ள விண்ணப்பள்ளி விளாமுண்டி விவசாயிகள் நல சங்கம் மற்றும் அப்பகுதி விவசாயிகள் இந்த தொழிற்சாலை இப்பகுதியில் அனுமதி பெற்று அமைக்கப்பட்டுள்ளதா என இன்று நேரடியாக ஆலைக்கு சென்று கேள்வி எழுப்பபோது ஆலை நிர்வாகத்தினர் சரியான பதில் அளிக்காமல் முன்னுக்கு பின் முரணாக பேசினர் இதற்கிடையே எந்தவித அனுமதியும் இன்றி இயங்கும் தொழிற்சாலையில் கழிவுநீர் வெளியேற்றப்படுவதால் அப்பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது.
இதனால் அப்பகுதியில் விவசாயிகள் விளைவிக்கும் வாழை, காய்கறி மற்றும் தென்னை மரங்கள் நோய் தாக்குதலுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கழிவு நீர் கலக்கும் குட்டையில் உள்ள தண்ணீரை கால்நடைகள் குடிப்பதால் கால்நடைகளுக்கும் நோய் தாக்கம் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த தொழிற்சாலையை ஒட்டி சுமார் 100 மீட்டர் தொலைவில் விளாமுண்டி வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் கழிவுநீர் காரணமாக வனப்பகுதியில் உள்ள யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகளும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எந்தவித அனுமதியும் இன்றி இயங்கும் தொழிற்சாலைக்குள் பல்வேறு நிறங்களில் ரப்பர் பேண்டுகள் சாயம் ஏற்றப்பட்டு கொதிகலன்களில் வைத்து பல்வேறு வகையான ரப்பர் பேண்டுகள் தயாரிக்கப்படுகிறது. தொழிற்சாலை வளாகத்தில் கான்கிரீட் தொட்டிகள் கட்டப்பட்டு அதன் சேகரிக்கப்படும் கழிவுநீர் இரவு நேரத்தில் குவாரி தண்ணீருக்குள் கலக்கப்படுகிறது. இந்த தொழிற்சாலையின் முன்பு தொழிற்சாலையின் பெயர் பலகையோ மேலும் தொழிற்சாலைக்கு முறையாக அனுமதி பெற்றுள்ளது குறித்த எந்த தகவல் பலகையும் வைக்கப்படவில்லை.
மேலும் இது குறித்து இப்பகுதி சுற்று வட்டார விவசாயிகள் சம்பந்தப்பட்ட துறைகளிடம் கேட்டபோது மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து இது போன்ற எந்த தொழிற்சாலைக்கும் அனுமதி வழங்கவில்லை என தெரிவித்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தொழிற்சாலை முன்பு கூடி தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறித்து தெரிவிக்குமாறு ஆலை நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் விவசாயத்தை பாதிக்கும் வகையில் செயல்படும் அனுமதி பெறாத இந்த ஆலையை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால் சுற்றுவட்டார கிராம மக்கள், விவசாயிகள் மற்றும் விண்ணப்பள்ளி விளாமுண்டி வனப்பகுதி விவசாயிகள் நல சங்கம் சார்பில் மிகப்பெரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்..