திருவண்ணாமலை அரசு கலை கல்லூரி எதிரில் உள்ள தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறையின் மூலம் செயல்படும் கலைஞர் நூற்றாண்டு தோட்டக்கலை பூங்காவினை பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை அரசு கலை கல்லூரி எதிரில் உள்ள தோட்டக்கலை துறைக்கு
9 ஏக்கர் பரப்பளவிற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவ்விடத்தில் கலைஞர் நூற்றாண்டு தோட்டக்கலை பூங்கா அமைக்கப்பட்டு தற்பொழுது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இப்பூங்காவிற்கான செலவின திட்ட மதிப்பீட்டு தொகையாக ரூ. 99.92 இலட்சத்திற்கு மதிப்பீடு பணிகள் நடைபெற்றுள்ளது. இப்பூங்காவில் தோட்டக்கலைதுறையின் மூலமாக புல்தரை, தியான மண்டபம், நடைபயிற்சிக்கான பாதை சிறுவர்களுக்கான விளையாட்டு திடல், தாமரைகுளம், பாறை பூங்கா, நாற்றாங்கால் மற்றும் அலுவலக கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சி தலைவரின் சிறப்பு நிதியின் மூலமாக கிரிவல பாதையில் இருந்து பூங்காவின் நுழைவு வாயில் வரை ரூபாய் 20 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் கற்கள் பதிக்கப்பட்ட பாதை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. பூங்காவின் பார்வை நேரம் காலை 9 முதல் மாலை 06.30 மணி வரையும் நடைப்பயிற்சிக்கான நேரம்;காலை 6 முதல் 9 மணி வரையும் மாலை 4 முதல் 6:30 மணி வரையும் ஆகும்.
இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணை தலைவர் பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ், மாநில தடகள சங்க துணைத்தலைவர் கம்பன், கலசப்பாக்கம் சட்ட மன்ற உறுப்பினர் சரவணன், தமிழ்நாடு அரசு உடல் உழைப்பு தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு வாரியம் ஸ்ரீதரன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, கோட்டாட்சியர் மந்தாகினி, நகராட்சி ஆணையாளர் தட்சாணமூர்த்தி, தோட்டக்கலை துறை துணை இயக்குநர் பாத்திமா, உதவி இயக்குநர் அன்பரசு, நகர மன்ற துணைத்தலைவர் ராஜாங்கம், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.