ஆன்லைன் விற்பனைகள் அதிகரித்து வரும் நிலையில், மருந்து பொருட்களும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.
அதில், சட்டவிரோத செயல்கள் நடப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், இ-ஃபார்மசிகள் மற்றும் இ-காமர்ஸ் தளங்கள் மூலம் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் சட்டவிரோத விற்பனையை சரிபார்க்கும் வகையிலும், தரவுகள் தவறாகப் பயன்படுத்துதல் போன்ற ஆபத்துகளை நிவர்த்தி செய்யும் வகையிலும், மருந்துகளை ஆன்லைனில் விற்பனை செய்வதற்கான தேசிய இணையதளம் ஒன்றை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த இணையதளம் உண்மையானதாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும். மருந்து சீட்டுகள் சரிபார்ப்பு இல்லாமல் எந்த விற்பனையும் செயல்படுத்தப்படாது. நோயாளிகள் மருந்துகளை வாங்குவதற்காக ஆன்லைன் மருந்துச்சீட்டுகளை வழங்கும் மருத்துவர்கள் அந்த தளத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் இதுகுறித்த விவரம் அறிந்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இதன் மூலம், போலி மருந்துகளின் விற்பனை, போதைக்கு அடிமையாக்கும் மருந்துகள் உள்ளிட்ட தேசிய பாதுகாப்புக் கவலைகள் மீதான அபாயங்களை குறைப்பதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிகிறது.
டெலிவரி பணியாளர்கள், மருந்து கடைகளில் இருந்து மருந்துகளை சேகரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் ஜொமேட்டோ -ஸ்விக்கி போன்றவற்றின் செயல்முறையை ஆன்லைன் மருந்து விற்பனையில் அரசாங்கம் எதிர்பார்க்கிறது. அதுபோன்ற செயல்பாடு செயல்திறனையும் பாதுகாப்பையும் மேம்படுத்தும் எனவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
முக்கிய இ-ஃபார்மா நிறுவனங்களுடன் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடந்த புதன்கிழமை பேச்சுவார்த்தை நடத்திமேட்டோ னார். இந்த கூட்டத்தில் முக்கிய நிறுவனங்கள் கலந்து கொண்டன. அப்போது, ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் ஆன்லைனில் மருந்துகளை விற்கும் முறை குறித்து அமைச்சர் கவலை தெரிவித்தார். மேம்படுத்தப்பட்ட அணுகுமுறைகளின் அவசியத்தையும் அவர் எடுத்துக்காட்டினார்..