காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி 2 நாள் பயணமாக லடாக் சென்றிருந்தார். லடாக் பயணத்தின் போது அவர் பேசுகையில், சுதந்திரத்திற்குப் பிறகு, மக்களவை, மாநிலங்களவை, திட்டக் கமிஷன் மற்றும் பாதுகாப்பு படைகள் உட்பட பல அமைப்புகளை இந்தியா உருவாக்கியது.
அதில் தற்போது ஆர்எஸ்எஸ் தனது அமைப்பை சேர்ந்தவர்களை உட்புகுத்த முயற்சி செய்கிறது என்று கூறினார்.
மேலும் அவர் கூறுகையில், அரசு அமைப்புகளில் மட்டுமல்ல, மத்திய அமைச்சர்களின் பணிகளை கூட ஆர்எஸ்எஸ் தான் தற்போது தீர்மானிக்கிறது என்றும், தன்னிடம் சில அதிகாரிகள் தாங்கள் ஆர்எஸ்எஸ்-ன் வழிகாட்டுதலை பெற்று தான் செயல்பட வேண்டும் என்று கூறியதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
இந்த இரண்டு நாள் லடாக் பயணத்தின் போது, லடாக் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அரசியல் கள நிலவரம் குறித்தும், கட்சி உள் விவகாரங்கள் குறித்தும் கலந்துரையாடினார்.
முன்னதாக பாரத் ஒற்றுமை யாத்திரையின் போது, காஷ்மீர் சென்ற ராகுல்காந்தி அப்போது லடாக் யூனியன் பிரதேசத்துக்குச் செல்லவில்லை. எனவே, அவர் லடாக்கிற்கு நேற்று முன்தினம் மற்றும் நேற்று என இரண்டு நாள் பயணம் செய்ததாக கூறப்பட்டுள்ளது