செந்தில் பாலாஜிக்கு ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உச்சநீதிமன்றம் அவரிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்திருந்தது. இதனை அடுத்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அமலாக்கத்துறை அதிகாரிகள், 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தது. செந்தில் பாலாஜியிடம் ஐந்து நாட்கள் விசாரணை முடிந்த பிறகு, மறுபடியும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அத்துடன் செந்தில் பாலாஜிக்கு சிறைக்காவல் இன்றுடன் முடிந்தது.
அதனால், எம்.எல்.ஏ, எம்.பிக்கள் வழக்குகளை விசாரிக்கு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சிறப்பு நீதிமன்ற நீதிபதி சிவக்குமார், அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை நீடித்து உத்தரவிட்டார். செந்தில் பாலாஜியின் காவலை 28ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டு, அன்றைய நாள் நேரில் ஆஜராக வேண்டும் என்று சிறைத்துறைக்கு ஆணையிட்டார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாகச் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயர்நீதிமன்ற அனுமதியோடு சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டு அங்கு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.
செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் இருப்பதாக அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதையடுத்து, இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் தீர்ப்பளிக்கையில், “இரண்டு நீதிபதிகள் அமர்வில் பரத சக்கரவர்த்தி கூறிய கருத்துடன் உடன்படுகிறேன்” எனத் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா ஆகியோர் மேல்முறையீடு செய்திருந்தனர்.
செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன் அடிப்படையிலேயே செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.