கோவையை அடுத்துள்ள பேரூர் சுண்டக்காமுத்தூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் ( வயது 42 ) இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்..இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன்- மனைவி 2 பேரும் விவாகரத்து செய்து கொண்டனர்.இதனால் ரவிச்சந்திரன் 2 -வது திருமணம் செய்ய பெண் தேடி வந்தார். இதற்காக அவர் ஆன்லைனில் உள்ள திருமண இணையதளங்களில் தனது பெயர் முகவரி உள்ளிட்டவைகளை பதிவு செய்தார் .மேலும் அவர் மாப்பிள்ளை தேவை என்று விதவை பெண்கள் யாராவது பதிவு செய்து உள்ளார்களா? என்று பார்த்துள்ளார். அப்போது நாமக்கல் திருச்சங்கோட்டை சேர்ந்த விதவைப் பெண் ஒருவர் வரன் தேவை என்று பதிவிட்டு இருந்தார் .இதை பார்த்த ரவிச்சந்திரன் உடனே அதிலிருந்து செல்போன் எண்ணுடன் தொடர்பு கொண்டு நான் மொத்த வியாபாரி .தனக்கு சொந்தமாக பள்ளி, கல்லூரிகள் உள்ளது. மேலும் சென்னையில் 60 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு, மேலும் பெங்களூரில் ஒரு பங்களா இருப்பதாகவும் கூறியுள்ளார் .மேலும் தான் விவாகரத்து பெற்று தனியாக வசிப்பதால் தங்களை திருமணம் செய்ய விரும்புவதாக அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். அதை நம்பிய அந்த பெண் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். அதன் பிறகு அவர்கள் 2 பேரும் செல்போனில் அடிக்கடி பேசிவந்தனர். இதை தொடர்ந்து அந்த பெண்ணை தொடர்பு கொண்ட ரவிச்சந்திரன் தனக்கு திருமண தோஷம் இருப்பதால் அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும். அதற்குப் பிறகுதான் உங்களை திருமணம் செய்ய முடியும். அதற்கு நீங்கள் உதவ வேண்டும் என்று கேட்டுள்ளார். அதை நம்பி அந்தப் பெண் ரவிச்சந்திரனுக்கு ரூ. 80 லட்சம் ரொக்க பணம் 167 பவுன் நகையும் கொடுத்துள்ளார் நகை பணத்தை கொடுத்த பிறகு அந்த பெண் ரவிச்சந்திரனை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்பட்டிருந்தது . இது குறித்து பேரூர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் ரவிச்சந்திரன் மீது வழக்கு பதிவு செய்து தொலைபேசி எண்ணை தேடி வந்தனர். அவரது செல்போன் எண்ணை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அதில் அவர் கரூர் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று ரவிச்சந்திரனை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது அவருடன் பெண் ஒருவரும் இருந்தார். இதையடுத்து போலீசார் ரவிச்சந்திரனை கோவைக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது .அதில் ரவிச்சந்திரன் தனது மனைவியை பிரிந்து 2-வது திருமணம் செய்ய பெண் தேடினார். அப்போது அவருடைய வலையில் விழுந்த நாமக்கல்லை சேர்ந்த பெண்ணிடம் நைசாக பேசி நகை-பணத்தைப் பறித்து சென்றுள்ளார். இதையடுத்து அவர் கரூர் பகுதியில் இருந்த போது கணவரை இழந்த பல் டாக்டருடன் ஆன்லைன் மூலமாக தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். பின்னர் அவர் அந்த பெண் டாக்டரிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதை நம்பிய பெண் டாக்டர் ரவிச்சந்திரன் இடம் நெருங்கி பழகினார். கணவன் மனைவி போல் வாழ்ந்துள்ளனர். மேலும் ரவிச்சந்திரன் பெண் டாக்டரை ஏமாற்றி பணம் வாங்கி அதில் 2 சொகுசு கார்கள் வாங்கி உல்லாசமாக வாழ்ந்துள்ளார் . அப்போதுதான் தன்னை கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக ஓட்டல் மற்றும் வீடுகளில் அடிக்கடி தங்கி உள்ளார் .மேலும் அவர் பீளமேடு திருப்பூரில் உள்ளிட்ட பகுதிகளில் கைவரிசை காட்டியதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ரவிச்சந்திரனை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.திருமண ஆசை காட்டி ஒரு பெண்ணை ஏமாற்றியதாக பீளமேடு போலீசாரால் கைது செய்யப்பட்ட ரவிச்சந்திரன் ஜாமினில் வெளியே வந்து மீண்டும் பெண்களை ஏமாற்றி நகை பணம் கார் பறித்த வழக்கில் கைதாகி இருப்பது குறிப்பிடத்தக்கது..