காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஊட்டியில் புகழ்பெற்ற சாக்லேட் சாக்லேட் நிறுவனத்தில் சாக்லேட் தயாரித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
ராகுல் க்யூட்டாக சாக்லேட் செய்கிற வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான வயநாடு தொகுதிக்கு செல்லும் வழியில், ஆகஸ்ட் 12-ம் தேதி ஊட்டிக்கு சென்றிருக்கிறார்.
ஊட்டிக்கு சென்ற ராகுல் காந்தி புகழ்பெற்ற சாக்லேட் தொழிற்சாலைக்கு சென்று பார்வையிட்டார். இந்த தொழிற்சாலையில் பணிபுரியும் அனைவரும் பெண்களே ஆவர். இந்த தொழிற்சாலைக்கு சென்ற ராகுல் காந்தி அவர்களுடன் மகிழ்ச்சியோடும் அன்போடும் உரையாடினார். மேலும், அவர்களிடம் ராகுல் காந்தி எப்படி சாக்லேட் தயாரிப்பது என்று கேட்டு அதன்படி சாக்லேட் தயார் செய்திருக்கிறார்.
ராகுல் காந்தி சாக்லேட் தயார் செய்தபோது பதிவு செய்யப்பட்ட வீடியோவை ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ராகுல் காந்தி சாக்லேட் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு சென்று அங்கே பணிபுரியும் பெண்கள், பார்வையிட வந்த குழந்தைகள் ஆகியோருடன் மகிழ்ச்சியுடனும் அன்புடனும் உரையாடுகிறார். அங்கே இருந்த ஒரு சிறுமியிடம் ஆட்டோகிராஃப் கேட்டு குழந்தையை உற்சாகப்படுத்துகிறார். இந்த வீடியோவைப் பார்க்கும் எவரையும் உற்சாகமும் மகிழ்ச்சியும் தொற்றிக் கொள்கிறது.
பின்னர் ராகுல் காந்தி விடுத்துள்ள அறிக்கையில், ‘உதகையில் மிகவும் பிரபலமான சாக்லேட் நிறுவனங்களில் ஒன்றான, மாடிஸ் ஆலையைப் பார்வையிட்டது மகிழ்ச்சியான அனுபவம் என்று குறிப்பிட்டுள்ளார். 70 பெண்கள் பணிபுரியும் இது போன்ற நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி வரி பெரும் சுமையாக இருக்கிறது என்று சாடிய ராகுல் காந்தி, இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களைப் பாதுகாக்க ஒரே விகித ஜி.எஸ்.டி வரி விதிப்பை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இந்த வீடியோவில், சாக்லேட் உற்பத்திக்கு என்ன விதமான ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுகிறது என்று ராகுல் காந்தி கேட்கிறார். இதற்கு முரளிதர் ராவ் என்பவர், ‘18% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுகிறது. இருப்பதிலேயே இதுதான் அதிக ஜி.எஸ்.டி வரி விதிப்பு’ என்று கூறுகிறார்.
இதற்கு ராகுல் காந்தி, ‘இதுதான் நாடு முழுதுமுள்ள பெரும் பிரச்னை. ஒரே விகித ஜி.எஸ்.டி வரி விதிப்பை அமல்படுத்த வேண்டும். நான் என்னசெய்ய வேண்டும்.’ என்று கேட்கிறார். இதற்கு முரளிதர் ராவ், ‘நாங்கள் சிறிய அளவிலான தொழில் நிறுவனத்தை நடத்தி வருகிறோம். அதனால், சிறந்த கட்டமைப்பை ஏற்படுத்த விரும்புகிறோம்.’ என்று கூறினார். இதைக் கேட்ட ராகுல் காந்தி, ‘கவனத்தில் கொள்கிறேன்’ என்று கூறினார்..