கோவை ஒர்க்ஷாப்பில் திடீரென வெடித்து சிதறிய லாரி டேங்கர் : வடமாநில தொழிலாளி பரிதாப பலி – ஒருவர் படுகாயம்..

கோவை மதுக்கரை அருகே போடிபாளையம் ரோட்டில் சண்முகம் என்பவருக்கு சொந்தமான பேப்ரிகேஷன் ஒர்க் ஷாப் உள்ளது. இங்கு சிட்கோவை சேர்ந்த லாரி வாட்டர் சர்வீஸ் உரிமையாளரான  கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் டாங்கர் லாரியை தண்ணீர் டாங்கர் லாரியாக மாற்றும் வேலை நடந்து வருகிறது.

லாரியில் இன்று காலை வெல்டிங் வேலை நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டேங்கர் வெடித்து சிதறியது . இதில் உத்தரபிரதேசத்தை  சேர்ந்த தொழிலாளி வகில் ( வதில் 38) அதே இடத்தில் உடல் கருகி இறந்தார். ரவி (வயது 18) என்பவர் படுகாயம் அடைந்தார். இவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

டேங்கரில் வேதியப் பொருட்கள் ஏற்றிச் செல்லப்பட்டதால் வெல்டிங் செய்யும் போது இந்த வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோவை மாவட்ட தீயணைப்பு அதிகாரி அண்ணாதுரை உதவி மாவட்ட அதிகாரி ராமச்சந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் கிணத்துக்கடவு நிலைய தீயணைப்பு அதிகாரி வேலுசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இது குறித்து செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..