வாஷிங்டன்: ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.
அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு ஜி20 என அழைக்கப்படுகிறது.
இதனிடையே, ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு வரும் 9 மற்றும் 10ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இந்தியா தலைமையில் நடைபெற உள்ள ஜி20 உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக வரும் 7ம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வர உள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரும் 7ம் தேதி இந்தியா செல்வார் என வெள்ளைமாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், 8ம் தேதி அதிபர் ஜோ பைடன் இந்திய பிரதமர் மோடியை சந்திப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஜோ பைடன் மற்றும் மோடி ஆலோசனை நடத்த உள்ளனர் என வெள்ளைமாளிகை தெரிவித்துள்ளது..