உதயநிதியின் சனாதன ஒழிப்பு பேச்சு… இண்டியா கூட்டணியில் மாறுபட்ட கருத்துக்கள்..!

சென்னை: 28 எதிர்க்கட்சிகளைக் கொண்ட “இந்தியா” கூட்டணி தலைவர்கள் தற்போது தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன ஒழிப்பு பேச்சு விவகாரத்தில் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சனாதன ஒழிக்கப்பட வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். இதனை பாஜக, சனாதன தர்மத்தை பின்பற்றுவோரை இனப்படுகொலை செய்ய வேண்டும் என உதயநிதி பேசிவிட்டார் என பிரசாரம் செய்தது. இந்தப் பொய் பிரசாரத்துக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்தும் வருகிறார்.

அதேநேரத்தில் உதயநிதி ஸ்டாலின் விவகாரத்தை முன்வைத்து “இந்தியா” கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகிற பணியை ‘கச்சிதமாக’ பாஜக செய்து வருகிறது. உதயநிதி ஸ்டாலின் பேச்சை “இந்தியா” கூட்டணி கண்டிக்க வேண்டும்; எதிர்க்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் தொடக்கம் முதலான நிலைப்பாடு. இப்போது “இந்தியா” கூட்டணியின் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் இந்த பிரச்சனையில் வெவ்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான ரஷீத் ஆல்வி, கரண் சிங் உள்ளிட்டோர் உதயநிதி ஸ்டாலின் கருத்தை கடுமையாக எதிர்த்தனர். ஆனால் கார்த்தி சிதம்பரம் எம்பி, கர்நாடகா அமைச்சர் பிரியங் கார்கே உள்ளிட்டோர் உதயநிதி கருத்தை ஆதரிக்கின்றனர். சட்டசபை தேர்தலை எதிர்கொண்டிருக்கும் சத்தீஸ்கர், மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர்கள், உதயநிதிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ம.பி. முன்னாள் முதல்வர் கமல்நாத், உதயநிதி கருத்தை ஏற்க முடியாது என்கிறார். சத்தீஸ்கர் துணை முதல்வர் டிஎஸ் சிங்டியோ, சனாதன தர்மம் என்பது வாழ்வியல். அது மத உணர்வு. அதற்கு உரிய மதிப்பளித்துதான் ஆக வேண்டும் என்றார். கேசி வேணுகோபால் போன்ற தலைவர்கள், சமதர்ம சமுதாயம்தான் முக்கியம் என பட்டும்படாமலும் கருத்து சொல்லி இருக்கின்றனர்.

திரிணாமுல் காங்கிரஸ்; மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி வெளிப்படையாக உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். உதயநிதியின் கருத்தை ஏற்க முடியாது; மத உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது என அறிவுரை வழங்கி இருக்கிறார். திரிணாமுல் செய்தித் தொடர்பாளர் குணால் கோஷ், “இந்தியா” கூட்டணிக்கும் உதயநிதி கருத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனாலும் உதயநிதி ஸ்டாலின் அப்படி பேசியது கண்டனத்துக்குரியது என குட்டு வைத்துள்ளார்.

ஜேடியூ, ஆர்ஜேடி: பீகார் மாநில ஆளும் கட்சிகளான ஜேடியூ, ஆர்ஜேடி ஆகியவை உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த இரு கட்சிகளின் தலைவர்களுமே உதயநிதி ஸ்டாலின், மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளன. ஆர்ஜேடியின் மிருத்துஞ்சய் திரிவேதி கூறுகையில், சனாதனத்தின் பெயரில் பாஜக அரசியல் செய்கிறது. சனாதனத்தை ஒழிப்போம் என யார் பேசி இருந்தாலும் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார்.

ஆம் ஆத்மி: ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங் கூறுகையில், இந்து மதம் குறித்து அமித்ஷா எங்களுக்கு பாடம் எடுக்க தேவை இல்லை என்கிறார்.

உத்தவ் தாக்கரே சிவசேனா: சிவசேனாவின் பிரியங்கா சதுர்வேதி கூறுகையில், சனாதனத்துக்கு எதிரான கருத்துகளை புறந்தள்ள வேண்டும் என கூறியுள்ளார்.இவ்வாறு இந்தியா கூட்டணியில் உள்ள கூட்டணி காட்சிகள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருவதால் இண்டியா கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.