திருவாரூர்: சனாதனத்தை எதிர்க்கும் கும்பல் நேற்று பெய்த மழைக்கு வந்த ஈசல்களை போன்றது என்றும் கழுகை போல் நினைத்து உயர பறக்க ஆசைப்பட்டால் சிறகொடிந்து கீழே தான் விழ வேண்டும் எனவும் மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் என்பது ஜாதி, மதங்களை கடந்து பொதுவானதாக இருக்க வேண்டுமே தவிர குறிப்பிட்ட ஒரு மதத்தின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் இருக்கக் கூடாது எனவும் மன்னார்குடி ஜீயர் பேட்டியளித்துள்ளார். மேலும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக கூறியிருக்கிறார்.
மேலும், உதயநிதி ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் சர்ச், மசூதிக்கு சென்று நீங்கள் செய்வது தவறு என்று வேறு மதத்தினரிடம் சொல்ல முடியுமா என மன்னார்குடி ஜீயர் சவால் விடுத்துள்ளார். இந்து மதத்திற்கும், இந்துகளுக்கும் விரோதமானவர்கள் நாட்டில் இருக்கக் கூடாது என்பதே தனது நிலைப்பாடு என ஜீயர் தெரிவித்துள்ளார்.
சனாதன தர்மம் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின் தலைக்கு 10 கோடி ரூபாய் விலை நிர்ணயித்து வடமாநில சாமியார் பேசியதில் தவறில்லை என்றும் சனாதன தர்மம் என்பது எங்கள் தாய்க்கு இணையானது எனவும் தெரிவித்தார். சனாதனம் என்பது பழமையை குறிப்பது என்று கூறிய மன்னார்குடி ஜீயர் அதன் நடைமுறைகளை மாற்றக்கூடாது எனக் கூறினார்.
ஆ.ராசாவை திமுக எதற்காக தனித் தொகுதியில் நிறுத்தியது என்று கேள்வி எழுப்பிய மன்னார்குடி ஜீயர், அவரை பொதுத்தொகுதியில் போட்டியிட வைத்திருக்கலாமே என வினவினார். இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றுவதில் தவறே இல்லை என்றும் நமது நாடு பாரத நாடு தான் எனவும் மன்னார்குடி ஜீயர் பேட்டியளித்துள்ளார். இவருக்கு திமுக தரப்பில் பதிலடி கொடுக்கப்படும் எனத் தெரிகிறது..