திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தில் மோசடி ஆவணங்களை காண்பித்து 16 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, லிப்ரா புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் காவல் துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
சென்னை: திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டத்தில் முதலீடு செய்வதாக கூறி 16 கோடி ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக லிப்ரா புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னையைச் சேர்ந்த பாலாஜி கபா என்பவர் சென்னை காவல் ஆணையர் ஆலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், “கடந்த 2020ஆம் ஆண்டு லிப்ரா புரொடக்சன்ஸ் பி லிமிடெட் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த ரவீந்தர் என்பவர், நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றுதல் திட்டம் ஆரம்பிக்க உள்ளதாகவும், அந்த திட்டத்தின் மதிப்பு 200 கோடி ரூபாய் என்றும், அதில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் வரும் என்றும் கூறினார்.
மேலும், திட்டம் ஆரம்பிப்பதற்காக போலியான ஆவணங்களை காண்பித்து தன்னை நம்பவைத்து 16 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய வைத்து, பவர் புராஜெக்ட் திட்டத்தை ஆரம்பிக்காமலும், வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றி வருவதால் மோசடி செய்த ரவீந்தர் மீது நடவடிக்கை எடுக்குமாறு” அந்த புகாரில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில், புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு, நம்பிக்கை ஆவணங்கள் மோசடி பிரிவில் வழக்கு பதிவு செய்து போலீசார் புலன் விசாரணை நடத்தினர். விசாரணையில்,லிப்ரா புரொடக்சன்ஸ் பி லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த ரவீந்தர் திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றுதல் திட்டம் தொடங்க இருப்பதாக போலியான ஆவணங்களை காண்பித்து பாலாஜி கபாவிடம் 15 கோடியே 8 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு பவர் புராஜெக்ட் திட்டத்தை ஆரம்பிக்காமலும், வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றியது உறுதியானதாக போலீசார் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து, இவ்வழக்கில் தொடர்புடைய ரவீந்தர் கைது செய்யப்பட்டு, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் போலீசார் அடைத்தனர்..