கோவை ரத்தினபுரி, பெரியார் வீதியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் ( வயது 47 )தொழிலதிபர். இவருக்கு சொந்தமான காரை அங்குள்ள நேரு வீதியில் ஒரு பள்ளிக்கூடம் அருகே நிறுத்தி இருந்தார். கடந்த 2-ந் தேதி அதிகாலையில் அந்த கார் திடீரென்று தீ பிடித்து எரிந்தது .இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் தீ மற்றொரு காருக்கும் பரவாமல் தடுக்கப்பட்டது. இதில் ஆனந்த குமாரின் கார் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது. சேத மதிப்பு ரூ.7 லட்சம் இருக்கும். இது தொடர்பாக ரத்தினபுரி போலீசில் ஆனந்தகுமார் புகார் செய்தார் . போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்தனர். இதில் காருக்கு தீ வைத்தது துடியலூர் பகுதியைச் சேர்ந்த கார் மெக்கானிக் பூபதி ( வயது 28) என்பது தெரிய வந்தது .இவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் பூபதி குவைத் நாட்டிற்கு செல்வதற்காக மும்பை விமான நிலையத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மும்பை விமான நிலையம் சென்று பூபதியை மடக்கி பிடித்தனர்.விசாரணையில் கார் மெக்கானிக்கான பூபதி கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன் ஆனந்த குமாரின் காருக்கு பழுது பார்த்து, சர்வீஸ் செய்துள்ளார். அப்போது பேசிய தொகையான ரூ 25 ஆயிரத்தில் ரூ 15 ஆயிரம் மட்டுமே பூபதிக்கு ஆனந்தகுமார் கொடுத்துள்ளார். பாக்கி தொகையை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். பலமுறை கேட்டும் கொடுக்காததால் ஆத்திரமடைந்து ஆனந்த குமாரின் காருக்கு தீவைத்ததாக கூறினார் .இதை தொடர்ந்து போலீசார் பூபதியை கைது செய்தனர்.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.