டெல்லியில் இன்று தொடங்கியுள்ள ஜி20 மாநாட்டின் முக்கிய நிகழ்வுகள் குறித்த முழுவிவரங்களை தற்போது பார்க்கலாம்..
உலகமே எதிர்பார்த்து காத்திருந்த ஜி-20 மாநாடு டெல்லியில் கோலாகலமாக தொடங்கியது. இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட உலக தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
ஜி-20 உச்சிமாநாட்டின் கருப்பொருள் வசுதைவ குடும்பகம் எனவும், இதில் ஒரு பூமி, ஒரு குடும்பம் மற்றும் ஒரு எதிர்காலம் என்ற தலைப்புகளில் 3 அமர்வு நடைபெறவுள்ளது.
இன்று காலை 10 மணி வரை ஜி20 தலைவர்களை பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக வரவேற்றார்.
பின்னர் தொடங்கும் முதல் அமர்வில் ‘ஒரு பூமி’ என்ற தலைப்பில் விவாதம் நடைபெறவுள்ளது.
மதிய உணவிற்கு பிறகு துவங்கும் இரண்டாவது அமர்வு ‘ஒரு குடும்பம்’ என்ற தலைப்பில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பிறகு பாரத் மண்டபத்தின் பல்நோக்கு மண்டபத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ஜி-20 தலைவர்களுக்கு இரவு உணவு வழங்கவுள்ளார். பின்னர் கலாச்சார நிகழ்ச்சியுடன் முதல் நாள் மாநாடு நிறைவடைகிறது.
மாநாட்டின் இரண்டாவது நாளான நாளை, ஜி-20 தலைவர்கள் தங்கள் மனைவிகளுடன் ராஜ்காட் செல்லவுள்ளனர். தொடர்ந்து தலைவர்கள் அனைவரும் பாரத மண்டபத்தில் மரக்கன்றுகளை நடும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
பின்னர் தொடங்கும் மூன்றாவது அமர்வு ‘ஒரே எதிர்காலம்’ என்ற தலைப்பில் நடைபெறவுள்ளது.
மாநாட்டின் நிறைவாக பிரதமர் மோடி பிரேசில் அதிபர் லூலாவிடம் ஜி-20 தலைவர் பதவியை ஒப்படைக்கவுள்ளார்.