ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த சேதுராஜா (50} என்பவரின் வீட்டில் போதைப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், ராமநாதபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் துரை உத்தரவின் பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை கண்காணிப்பில், ராமேஸ்வரம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் உமா தேவி மண்டபம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சதீஸ்குமார், பாம்பன் காவல் நிலைய காவலர் எஸ்.சம்பத்குமார், பாம்பன் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமை காவலர் கே.கேசவன், மண்டபம் காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் பாரதி ராஜன் ஆகியோர் சேதுராஜா வீட்டை சோதனை செய்தனர். அவரது வீட்டில் இருந்த தலா ஒரு கிலோ வீதம் 6 கிலோ மெத்தம் பேட்டமைன் போதை பொருள் கைப்பற்றப்பட்டது. இச்சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில் சேதுராஜவின் மகன்
நாககுமார் (25), அவரது உறவினரான சூடை வலை குச்சு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (25) ஆகியோர் சென்னையிலிருந்து போதை பொருட்களை வாங்கி காரில் கொண்டு வந்ததாக தெரியவந்தது. இதன் பெயரில் இருவரையும் மண்டபம் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்தனர் இதனை தொடர்ந்து சேதுராஜா மனைவி மாரியம்மாள் (45), சூடை வலை குச்சு பகுதியைச் சேர்ந்த பாக்யராஜ் ஆகியோர் போதை பொருட்களை நாககுமாருக்கு சொந்தமான நாட்டுப்படகில் இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.5 கோடி என்பதால் போதை பொருளுக்கு யாரிடம் பெறப்பட்டது என்பது குறித்து தனிப்பிரிவினர் விசாரணை செய்து வருகின்றனர்..