செந்தில்பாலாஜி ஜாமீன் மனு: அமலாக்கத்துறை பதில் கூற நீதிமன்றம் புதிய உத்தரவு..!

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரின் பெயரில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

தற்போது வரை அமலாக்கத்துறை விசாரணை வளையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி இருக்கிறார்.

செந்தில் பாலாஜி உடல்நிலை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர் அமைச்சர் பொறுப்பில் இருப்பதால் எம்எல்ஏ, எம்பிக்கள் மனுக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றதிற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது.

ஆனால், சிறப்பு நீதிமன்றமும் இந்த ஜாமீன் வழக்கை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கும் என விசாரிக்க மறுத்தது. இதனை அடுத்து , செந்தில் பாலாஜி மீதான ஜாமீன் மனுவை யார் விசாரிக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டு , அந்த வழக்கில், ஜாமீன் மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றமே விசாரிக்கும் என கூறியது.

இதனை தொடர்ந்து முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கான ஜாமீன் கேட்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி உடல் நலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் கோரப்பட்டது. அதே வேளையில் விசாரணைக்கு கூடுதல் அவகாசம் கேட்டு அமலாக்கத்துறையும் வாதிட்டது.

இந்த வழக்கு விசாரணை தொடர்பான விவரங்களை தாக்கல் செய்யுமாறு அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தது. வரும் வெள்ளிக்கிழமை அன்று இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்து செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது பற்றிய உத்தரவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.